திமுக இளைஞரணி செயலாளராகிறாரா உதயநிதியின் மகன் இன்பநிதி..? CM ஸ்டாலினையே மிஞ்சிய அமைச்சர் கே.என். நேரு..!!
Author: Babu Lakshmanan17 December 2022, 8:50 pm
அமைச்சராக பதவியேற்பு
முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும்,சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி அண்மையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்தே தமிழக அரசியலில் அது விவாதத்துக்குரிய ஒன்றாக மாறிவிட்டது.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என அத்தனை அமைச்சர்களும் கட்சி தொண்டர்களும் ஏக மனதாக விரும்பியதால் பதவி கொடுக்கப்பட்டு இருப்பதாக திமுகவினர் உற்சாகம் பொங்க கூறிவருகிறார்கள்.
அதன் கூட்டணி கட்சியினரும் உதயநிதிக்கு தகுந்த நேரத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது இது பெருமைக்குரிய விஷயமே என்று பாராட்டுகின்றனர். இன்னும் சில நட்பு கட்சியினர் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கவேண்டும் என்றும் ஆதங்கப்படுகின்றனர்.
அதேநேரம் அதிமுக,பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை மிகக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தன.
எதிர்கட்சிகள் விமர்சனம்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உதயநிதி அமைச்சராக பதவி ஏற்பதற்கு ஒரு நாள் முன்னதாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேசும்போது, “உதயநிதி அமைச்சரானதும் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடப் போகிறதா? வாரிசு என்பதற்காக தனது மகனுக்கு ஸ்டாலின் முடிசூட்டு விழா நடத்துகிறார். உதயநிதியை திமுக தலைமைக்கு கொண்டு வருவதற்கான முன்னோட்டம்தான் இந்த அமைச்சர் பதவி. தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். திமுகவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நடைபெற்று வருகிறது. ஒரு முதலமைச்சருக்கே தாங்காத போது, நான்கு முதலமைச்சர் என்றால் நாடு தாங்குமா?” என்று காட்டமாக விமர்சித்து இருந்தார்.
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனின் எதிர்ப்புக்கான காரணம் சற்று வித்தியாசமாக இருந்தது.
அவர் வெளியிட்ட அறிக்கையில் “அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் பேரனும், தந்தையின் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆகியுள்ள ஸ்டாலினின் மகனுமான உதயநிதி அமைச்சராகி உள்ளார். இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சி, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தமிழகத்தில்தான். அந்த பெருமை திமுகவுக்கு மட்டும்தான். முதலமைச்சரின் மகன் என்பதால்தான் இப்படி குறுகிய காலத்தில் இந்த உயரத்தை உதயநிதியால் எட்ட முடிந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்று நாசூக்காக கிண்டலடித்து இருந்தார்.
கே.என். நேரு
இந்த நிலையில்தான் சேலத்தில் நடந்த திமுக விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு
முதலமைச்சர் ஸ்டாலினையே மிஞ்சும் விதமாக அதிரடி காட்டியிருக்கிறார்.
“என் மீது 9 கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டது. பல நிர்வாகிகள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக நிர்வாகிகள் மீது யார் மீதும் வழக்கு போடவில்லை. ஆனால் உங்கள் மீது வழக்குகள் போடாததால்தான் தொடர்ந்து பேசி வருகிறீர்கள்.
தற்போது அதிகம் பேசும் நிலையில் இனிவரும் காலங்களில், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை வந்துவிடுமோ என்று எண்ணுகிறேன்.
சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு சொல்கிறேன். சேலத்தில் திமுகவில் ஒரு சட்டப் பேரவை உறுப்பினர் இருக்கும் நிலையில் வருங்காலத்தில் 11 உறுப்பினராக மாறுவார்கள். அனைத்திலும் திமுக வெற்றிபெறும். எம்ஜிஆர், ஜெயலலிதாவை திமுக பார்த்து உள்ளது. அவர்களையும் வெற்றி கண்டுள்ளது. இனி திமுக இறுதிவரை வெற்றிபெறும். நிரந்தர முதலமைச்சராக ஸ்டாலின்தான் இருப்பார்.
தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் எல்லோரும் சாதாரண நபர்கள். எங்களை அமைச்சராக்கி அழகு பார்த்தது கருணாநிதி அவர்களின் குடும்பம்தான். எங்களை போல் எண்ணற்றவர்களை தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் உருவாக்கிய குடும்பம்தான் கருணாநிதி குடும்பம். அந்த குடும்பத்திற்கு விசுவாசம் இல்லாமல் நாங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்க போகிறோம்?
அதிமுக ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடியுள்ளதா? யார் ஆட்சியில் தேனாறும், பாலாறும் ஓட முடியும்?எடப்பாடி பழனிசாமி, எங்களிடம் பூச்சாண்டி காட்டவேண்டாம், வாரிசு அரசியல் என்று கூறும் அவருக்கு, வாரிசு இல்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும். வாரிசு அரசியல் வாய்ப்பு இருந்தால், உங்களால் முடிந்தால் செய்யுங்கள்.
உதயநிதி அல்ல அவருடைய மகன் வந்தால் கூட அவருக்கு நாங்கள் வாழ்க என்று செல்வோம். எங்களிடம் வாரிசு அரசியல் என்று சொல்லி எங்களை எதுவும் செய்ய முடியாது. மேலும் திமுக மட்டும்தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு தரும் ஒரே இயக்கமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
திமுகவினர் நம்பிக்கை
அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகியும் வருகிறது.
அமைச்சர் கே.என்.நேருவின் அதிரடி பேச்சு குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுவது இதுதான். “உதயநிதி இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகுதான் தேர்தல்களில் திமுக வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகிறது என்று திமுக அமைச்சர்கள் அனைவருமே நம்புகின்றனர். அதேபோல இளைய அமைச்சர்களும் உதயநிதியை மனம் உவந்து வரவேற்று இருக்கின்றனர்.
அதனாலேயே மூத்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூட உதயநிதியை கண்டு எதிர்கட்சியினர் அஞ்சுவதால்தான் செல்லும் இடமெல்லாம் அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர் என்றும் சொல்கிறார். இது இயல்பான ஒன்றுதான்.
ஆனால் அமைச்சர் கே.என். நேரு திமுகவின் அடுத்த தலைமுறை பற்றிய பேச்சை இப்போதே தொடங்கி வைத்து விட்டார் என்றே தோன்றுகிறது. அவர் சொல்வதைப் பார்த்தால், திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி என்பது போலவும், அவர் தனது மகன் இன்பநிதியை இளைஞர் அணி செயலாளராக ஆக்குவார். முதலமைச்சராக இருந்தால் அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து அழகு பார்ப்பார் என்று கூறுவது மாதிரியும் இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால் அது தமிழக மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கணிப்பது மிக மிக கடினம்.
அதேசமயம் 5 வருடங்களுக்கு முன்பு என் மகன் உதயநிதி ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டார் என்று ஸ்டாலின் கூறியபோது, அதை உதயநிதியும் ஏற்றுக்கொண்டது போல நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று உறுதிபட தெரிவித்தார்.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட போது எல்லாம் தலைகீழாக மாறிப் போய்விட்டது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி வெற்றி பெறவும் செய்தார். ஆனால் கருணாநிதியின் மறைவிற்குப் பிறகே திமுகவில் இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதேபோல இன்பநிதி அரசியல் களத்தில் குதிக்கும் போதுதான் இதுபற்றி எதையும் உறுதியாக கூற முடியும். எனினும் அவரை திமுகவினர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அமைச்சர் கேஎன் நேரு வெளிப்படையாக வலியுறுத்துகிறார் என்றே இதை கருதத் தோன்றுகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.