துரைமுருகன், பொன்முடிக்கு CM ஸ்டாலின் வைத்த செக்… சீனியர் அமைச்சர்கள் திக் திக்..!

Author: Babu Lakshmanan
10 May 2023, 9:09 pm

தமிழகத்தின் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டிருப்பதை விட பால்வளத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆவடி நாசர் தூக்கி அடிக்கப்பட்டிருப்பதுதான், தற்போது தமிழக அரசியலில் ‘ஹாட் டாபிக்’காக உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் சர்ச்சை ஆடியோ வெளியானபோதே தமிழக அமைச்சரவையில், பெரிய அளவில் மாற்றங்கள் வரும், துரைமுருகன், பொன்முடி, கே என் நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், கயல்விழி, கா ராமச்சந்திரன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் ஊடகங்களில் பரபரப்பு செய்திகள் உலா வந்தன.

CM Stalin - Updatenews360

இதற்கு முக்கிய காரணம் பொதுவெளியில் இவர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் இதனால் தமிழக மக்களிடையே திமுக அரசு மீது கொந்தளிப்பான மனநிலை உருவாகி இருக்கிறது என்றும் வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்கள்தான்.

திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த இரண்டாண்டுகளில், தமிழக அமைச்சரவை இருமுறை மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு வழங்கப்பட்டது.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது 10 அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றப்பட்டது.

trb raja - updatenews360

இந்நிலையில்தான் திமுக பொருளாளர் டி ஆர் பாலு எம்பியின் மகனும், மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏவுமான, டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதேநேரம் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஆவடி நாசர் மீது சமீபத்தில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த பதவி பறிப்பு நடந்துள்ளது. மேலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு, இதுவரை 2 முறை திமுக அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையிலும், யாருடைய பதவியும் பறிக்கப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆவடி நாசரின் பதவி பறிப்புக்கு மூன்று முக்கிய காரணங்களை
கூறுகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆவடி நாசர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அவர் உட்காருவதற்கான நாற்காலியை திமுக தொண்டர் ஒருவர் தாமதமாக எடுத்து வந்ததால், அவரைத் திட்டிக்கொண்டே கீழே கிடந்த கல்லை எடுத்து அந்த தொண்டர் மீது ஆவேசமாக வீசி எறிந்தார். இது திமுகவினரை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் முகம் சுளிக்க வைத்தது. அவர் கோபத்துடன் கல் எறிந்த வீடியோ காட்சி டிவி செய்தி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் அப்போது வைரல் ஆனது.

ஆவடி நாசர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். அதனால்தான் இப்படி நடந்து விட்டது என்று கூறப்பட்டாலும் கூட திமுக தலைமைக்கு இந்த விவகாரம்
ஒரு பெரிய தலைவலியாகவே மாறியது.

ஏனென்றால், “ஒரு பொறுப்பை கொடுத்தால் முழுமையாக வெற்றிகரமாக எல்லோரையும் பெருமைப் படுத்தக்கூடிய வகையில் அதை நிறைவேற்றக்கூடிய ஆற்றலை பெற்றவர் நாசர்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் நாசரின் இல்லத் திருமண விழாவில் புகழ்ந்து பேசி இருந்தார்.

அதே நிகழ்ச்சியில் “எங்கே என்ன தப்பு நடக்கும் என்று இன்று பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தும்மினால் போதும் அதை கண்டுபிடித்து செல்போனில் போட்டோ எடுத்து அதை வெளியிடக்கூடிய ஊடகங்கள் இன்று இருக்கின்றன. அந்த அளவுக்கு இன்று சோசியல் மீடியா பரவி உள்ளது. எனவே கட்சியினர் அனைவரும் எச்சரிக்கையோடு செயல் படவேண்டும்” என்று அப்போது ஸ்டாலின் அறிவுரையும் கூறினார். ஆனாலும் கூட அடுத்த மாதமே அதை ஏற்க மறுக்கும் விதமாக நாசர் நடந்துகொண்டதுதான் திமுக தலைமைக்கு ஒரு தர்ம சங்கட நிகழ்வாக அமைந்துவிட்டது.

இரண்டாவதாக நாசருக்கு அவருடைய மகன் ஆசிம் ராஜாவால் ஏற்பட்ட சிக்கலை சொல்லலாம்.

ஆவடி மாநகர செயலாளராகவும், ஆவடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலராகவும், பணிக்குழு தலைவராகவும் இருந்த ஆசிம்ராஜா ஆவடி மேயர் உதயகுமாரை தாண்டி டெண்டர் விவகாரங்களில் தனி ஆவர்த்தனம் செய்து வருவதாகவும் அவருடைய ஆட்டம் ஆவடியில் மிக அதிகமாக இருப்பதாகவும் புகார்கள் திமுக தலைமைக்கு குவிந்தது. ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்ததாக கூறப்பட்டதும் கண்டனத்துக்கு உள்ளானது.

தவிர ஆவடியில் உள்ள 5-வது காவல் பட்டாலியனுக்கு சொந்தமான இடத்தில் திமுகவின் கொடியை நட்டு கடைகள் போடப்பட்டதாக கூறப்படும் நிகழ்வின் பின்னணியில் ஆசிம்ராஜா இருந்ததாக முதலமைச்சருக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில், முதலமைச்சரின் கட்டுப்பட்டில் உள்ள காவல்துறை நிலத்தையே ஆக்கிரமிப்பு செய்த புகார் காரணமாக ஆசிம்ராஜாவின் மாநகர செயலாளர் பொறுப்பு கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக பறிக்கப்பட்டது. அந்தப் பதவியில் அவர் ஐந்து மாதங்கள் கூட நீடிக்கவில்லை

மூன்றாவது காரணம், ஆவின் பால் கொள்முதல் தொடர்பானது. திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் ஆவின் நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 42 லட்சம் லிட்டர் பாலை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்வதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டின் மத்தியில் இது 36 லட்சம் லிட்டராக சரிந்தது. தற்போது இந்தக் கொள்முதல் 27 லட்சம் லிட்டராக குறைந்துவிட்டது என்கிறார்கள். இதனால்தான் மதுரை, தேனி, தூத்துக்குடி, சேலம், கன்னியாகுமரி, வேலூர் மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Aavin Bribery - Updatenews360

கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் இப் பிரச்சினைக்கு பால்வளத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாசர் தீர்வு காணவில்லை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில்தான் “ஆவின் பால் பற்றாக்குறையை தவிர்க்க மராட்டிய மாநிலத்தில் புதிதாக தொடங்கப் பட்ட ஒரு தனியார் பால் நிறுவனத்திடம் இருந்து தரமற்ற பால் பவுடர் மற்றும் வெண்ணையை வாங்கி அதை ஆவின் பாலுடன் கலந்து பற்றாக்குறையை சமாளிக்கிறார்கள். தினமும் இப்படி 11 லட்சம் லிட்டர் பாலை கலப்பட பாலாக ஆவின் தயாரித்து விற்பனை செய்கிறது. இதில் 500 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது” என்ற குற்றச்சாட்டை அண்மையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி ஆவின் நிர்வாகத்தின் மீது வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுவும் கூட ஆவடி நாசருக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. அதனால்தான் அவருடைய பதவி பறிக்கப்பட்டு விட்டது என்ற தகவலும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

“அமைச்சர் நாசரின் பதவியை முதலமைச்சர் ஸ்டாலின் பறித்திருப்பதால் சீனியர் அமைச்சர்களில் துரைமுருகன், பொன்முடி,கே என் நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன் மற்றும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் போன்றோரின் அமைச்சர் பதவிகள் தற்காலிகமாக தப்பித்து இருக்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

PTR - Updatenews360

“சீனியர் அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும்போதும் பெண்களை கேலி செய்யும்
விதமாக பேசுவதும் நடந்து கொள்வதும் இன்னும் நின்ற பாடில்லை. துரைமுருகன் சமீபத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதை பெருமையாக பேசுவதாக நினைத்து, “பஸ்சுக்கு அம்மாவிடம் போய் கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே. ஒரு செல்போன் வாங்கி வச்சுக்கோ. அதுல நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு என்று அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்” என்று சிரித்துக் கொண்டே கிண்டலாக கூறியது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

அதேபோல கே என் நேருவும்,
பொன் முடியும் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்வதை இன்னும் நிறுத்தவில்லை. சாத்தூர் ராமச்சந்திரன் மட்டும் சற்று அடக்கி வாசிப்பது போல் தெரிகிறது. இத்தனைக்கும் நாசர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது திமுக அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள், கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் அறிவுரை கூறும் விதமாகத்தான், “அமைச்சர் பொறுப்பில் இருக்கக்கூடிய நாசருக்கு ஏதாவது ஒரு இழுக்கு வந்தால் அது எனக்கு மட்டுமல்ல இந்த கட்சிக்கே ஒரு அவப்பெயர் வந்து விடும்” என்றும் முன்னெச்சரிக்கையாக பேசி இருந்தார். ஆனால் அதை நாசர் கேட்காமல் போனதுதான் அவருடைய பதவிக்கு வேட்டு வைக்க காரணமாக அமைந்துவிட்டது. அதை சீனியர் அமைச்சர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்போது பதவி பறிப்பு நடவடிக்கையை முதல் முறையாக ஸ்டாலின் எடுத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எனது அறிவுரையை கேட்டு நடக்காவிட்டால் அமைச்சர் பதவியை பறிக்கவும் தயங்க மாட்டேன் என்று மறைமுக எச்சரிக்கை விடுப்பது போலவும் இது அமைந்திருக்கிறது. அதனால் சீனியர் அமைச்சர்கள் மட்டுமின்றி எல்லா அமைச்சர்களுமே ஒரு வித பதைபதைப்பில்தான் இருக்கிறார்கள்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் எதார்த்த நிலையை கூறுகிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!