1991ல் நடந்தது நியாபகம் இருக்கா..? திமுக ஆட்சியை கலைக்க நேரிடும் ; CM ஸ்டாலினுக்கு சுப்பிரமணிய சுவாமி வார்னிங்..!!
Author: Babu Lakshmanan5 September 2023, 4:50 pm
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்தக் கருத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காவல்நிலையங்களிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மட்டுமின்றி, I.N.D.I.A. கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதைக் கண்டித்த மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணியன், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளேன் ; மீண்டும் ஒரு முறை சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான பணிகளை செய்வேன். நான் ஏற்கனவே 1991ல் இந்தியா என்பது கூட்டமைப்பு அல்ல, பல மாநிலங்களின் ஒன்றியம் என்பதை நிரூபித்தவன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதாவது, வெறுப்புணர்வை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டி ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது திமுகவுக்கு மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.