முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட 3 பேர் மீது பரபரப்பு புகார் : ஆளுநரிடம் ஆதாரத்தை சமர்பித்த சவுக்கு சங்கர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 10:06 pm

தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி மற்றும் உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகியோர் மீது ஆதாரத்துடன் ஆளுனரிடம் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பிரபல அரசியல் விமர்சகரும் பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், தி.மு.க ஆட்சி குறித்தும், முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

இதனிடையே திமுக அரசின் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சவுக்கு சங்கர் ஆளுனரை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அதன்படி இன்று சந்திப்பார் என ஏற்கனவே கூறிய நிலையில், இது குறித்து ஆளுனர் மாளிகை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனாலும், வெளியான தகவலின் படி இன்று மாலை சவுக்கு சங்கர் ஆளுனரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில், ஆளும் கட்சியான திமுக குறித்து பல்வேறு ஊழல் புகார்களை ஆதாரத்துடன் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சவுக்கு சங்கர், விடியற்காலை 1.30 மணிக்கு தியேட்டரில் படம் திரையிடப்படுகிறது என்பதே ஆளுனருக்கு தெரியவில்லை.

1.30 மணிக்கு ஷோ போட்டு அதில் வினோத் என்ற வாலிபர் இறந்துவிட்டதாக சொன்னேன். பொங்கல் தினத்தில் வெளியான இரண்டு படங்களுக்கும் டிஸ்டிபியூட்டர் ரெட் ஜெயண்ட் உதயநிதிதான் என்பதையும் சொன்னேன்.

இரண்டு படங்களுக்கும், சிறப்பு காட்சிக்கு அனுமதி ஜனவரி 11-ந் தேதி இரவு 8.30 மணிக்குதான் கொடுக்கப்பட்டது. ஆனால் 11ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கே தியேட்டர்களில் 7 ஷோ 8 ஷோ படம் திரையிடப்பட்டது.

10-ந் தேதி தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவரது உத்தரவை மீறி 7 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. இவ்வாறு படங்கள் வெளியான பிறகு மறுநாள் தான் சிறப்பு காட்சிக்கு அனுமதி என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மதிக்காமல், தியேட்டர்கள் இந்த மாதிரி செய்ததற்கான காரணம், இந்த திரைப்படத்தை விநியோகம் செய்தது முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்பதுதான்.

இந்த சிறப்பு காட்சிக்கு தாமதாமாக அனுமதி கொடுத்ததன் மூலமும், சிறப்பு காட்சிகளுக்காக டிக்கெட் விலை 1000 முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்ததன் மூலமும், தனது மகனுக்கு பலகோடி ரூபாய் லாபத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி, உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடுமாறு ஆளுனரிடம் புகார் அளித்துள்ளேன்.

மேலும் சில தகவல்களை ஆளுனர் என்னிடம் கேட்டுள்ளார். அவற்றை சேகரித்தவுடன் மீண்டும் ஆளுனரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. நான் சொன்ன தகவல் உண்மைக்கு மாறாக இருந்தால் என்மீது அவதூறு வழக்கு பதிவு செய்யுங்கள் என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 512

    0

    0