I.N.D.I.A கூட்டணி கொடுத்த பரபரப்பு புகார்… நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 6:56 pm

I.N.D.I.A கூட்டணி கொடுத்த பரபரப்பு புகார்… நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மிகவும் பதற்றமான மாநிலமாக மணிப்பூர் அறியப்பட்டிருந்தது. மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என இரண்டு தொகுதிகள் இருக்கின்றன.

இரண்டு தொகுதிகளுக்கும் ஏப்.19 திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பிற்பகல் சுமார் 2 மணியளவில் துப்பாக்கிகளுடன் வாக்குப்பதிவு மையத்தை நோக்கி வந்த மர்ம நபர்கள், வானத்தை நோக்கி சுட்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பிஷ்னுபூர் மாவட்டத்தின் மொய்ராங் தொகுதிக்கு உட்பட்ட தம்னாபோக்பி என்ற இடத்தில், இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரண்டு நபர்கள் கையில் நவீன ரக துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு வாக்குச்சாவடியை நோக்கி ஓடும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
அதேபோல, இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மர்ம நபர்களை தடுக்கவில்லை. இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் சிலர் போலீசாரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மற்றொரு பகுதியான இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள யூரிபோக் மற்றும் இரோயிஷெம்பா கெய்ராவ் ஆகிய இடங்களில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்களை விரட்டியடிக்க முயன்றுள்ளனர்.

மேலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்காளர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் மின்னணு வாக்கு பெட்டி இயந்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உள் மணிப்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அங்கொம்சா பிமோல் அகோய்ஜாம், போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். மணிப்பூர் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

இதனையடுத்து கலவரம் நடைபெற்ற 11 வாக்குச்சாவடிகளுக்கு நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருக்கிறார். மறு தேர்தலின்போது கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்றும் கூறியுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…