செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்கு… தமிழக அரசுக்கு அவகாசம்.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!!
Author: Babu Lakshmanan21 July 2023, 4:53 pm
அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்தது.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் உள்ளிட்ட 3 பேர் ,செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 2 ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் என்பதால் எதன் அடிப்படையில் தகுதி இழப்பு..?, எந்த சட்டப்பிரிவில் செந்தில் பாலாஜி தகுதி இழப்புக்கு ஆளாகிறார் ? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
ஒரு மாதத்துக்கு மேல் காவலில் உள்ள ஒருவர் எப்படி அமைச்சராகத் தொடர முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், தமிழக அரசு தரப்பு வாதங்களுக்காக விசாரணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.