சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாரா ஆ.ராசா…? தனித்தமிழ்நாடு முழக்கத்தால் திமுகவுக்கு காத்திருக்கும் சிக்கல்…!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 4:41 pm

ஆ.ராசா பரபரப்பு பேச்சு

நாமக்கல் நகரில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த திமுகவின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, தனித் தமிழ்நாடு குறித்து ஆவேசமாக பேசியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதுடன் பெரும் பேசு பொருளாகவும் மாறி இருக்கிறது.

முன்னணி ஆங்கில செய்தி சேனல்கள் இதன்மீது தொடர்ந்து கார, சார விவாதங்களையும் நடத்தி வருகின்றன.

திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டின் போது “மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி” என்ற தலைப்பில் ஆ ராசா எம்பி பேசியது இதுதான். “எல்லா மாநிலங்களையும் சமமாக பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிரில் பேசவில்லை. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு, திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார்.

தனித் தமிழ்நாடு

பிரிவினைவேண்டும், தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். பேட்ஜ் அணிந்துகொள்ளுங்கள். சுதந்திரத் தமிழ்நாடுதான் நம்முடைய கடைசித் தீர்வு என்று பெரியார் சொன்னார். அவரை முழுமையாக ஏற்றுக்கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி, ஜனநாயகத்துக்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக, எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, ‘இந்தியா வாழ்க’ என்று சொன்னோம். இன்னும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

அதனால், பாஜகவின் அமித் ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்குச் சொல்கிறேன்… உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக்கொண்டு சொல்கிறேன். அண்ணாவழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்” என்று பொங்கினார்.

இப்படி ஆ ராசா கொளுத்திப் போட்ட தனித் தமிழ்நாடு வெடி இப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கிளம்பிய எதிர்ப்பு

இதை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் “திமுக பிரிவினைவாதம் பேசுகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல” என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளும் ஆ ராசாவின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி உள்ளன.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆ.ராசாவின் பேச்சை உடனடியாக கண்டிக்க வேண்டும் இல்லையேல் ஆ.ராசாவின் பேச்சு தமிழக அரசின் நிலைப்பாடாக கருதப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் தனிநாடு குறித்து தமிழக மத போதகர் ஜெகத் கஸ்பர் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோவை வெளியிட்டு “இவர்மீது தமிழகம் முழுவதும் காவல்நிலையத்தில் புகாரளிக்கும்படி தேசபக்தர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்றும் ஹெச். ராஜா கேட்டுக் கொண்டும் இருக்கிறார்.

மாநில பாஜக செயலாளர் கரு நாகராஜன், “இது போன்ற பேச்சுக்களை சகித்துக் கொள்ள இயலாது. மாநிலத்தில் தாங்கள் செய்து வரும் தவறுகளை மறைப்பதற்காக திமுக இதுபோல் மக்களின் உணர்வுகளை கிளப்பிவிட்டு திசை திருப்பும் வேலையில் இறங்கி இருக்கிறது. தமிழக மக்கள் ஒரு போதும் பிரிவினைவாதத்தை ஏற்க மாட்டார்கள்” என்று காட்டமாக குறிப்பிட்டார்.

அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறும்போது, “கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே ஆ ராசா பிரிவினைவாத விதையை தமிழகத்தில் தூவி வருகிறார்.
அவருடைய பேச்சு, எல்லை மீறிய ஒன்று. மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக மத்திய அரசு என்று அழைக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்து விட்டால் ஒன்றிய அரசு என்பார்கள்” என்று கலாய்த்து உள்ளார்.

திமுக பிளவுபடும்

பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, ‘ முதலமைச்சரை மேடையில் வைத்து கொண்டு வேண்டுமென்றே இந்த பேச்சைப் பேசியிருக்கிறார் ஆ.ராசா. ஈ.வெ.ரா வழி வேறு, அண்ணா வழி வேறு என்றும் தெளிவாக கூறியிருக்கிறார் ஆ.ராசா. அதாவது, திக பிளவுபட்டது போல் திமுகவும் பிளவுபடும் என்கிறார். இது திமுகவிற்கான மிரட்டல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறும்போது “திராவிட நாடு கோரிக்கையை தமிழகத்தில் போராடி பெற முடியாது. வேண்டுமென்றால், திகார் ஜெயிலில் எழுதிப் பார்த்துக் கொள்ளலாம். இந்தியா – இந்தியா தான். இந்த தேசத்தை மீண்டும் எவராலும் பிரிக்க முடியாது!” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

2ஜி வழக்குடன் சிறை

பிரபல நடிகையும் தமிழக பாஜக முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்ட பதிவில் ராசாவை மட்டுமின்றி, திமுகவையும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

“ஆ.ராசாவுடன் திமுகவின் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு தனி நாடு கேட்க வேண்டும். ஆனால் நாங்கள் உங்களுக்கு தமிழ்நாட்டை கொடுக்க மாட்டோம். நீங்கள் விரும்பினால், கொலம்பஸ் மற்றும் கால்டுவெல் போல் கப்பலில் பயணம் செய்து, ஒரு தீவு கண்டுபிடித்த பிறகு பெரியாரின் விருப்பப்படி பெயரை “திராவிட நாடு” என்று வைத்து வாழலாம்.

இந்த இந்திய மண் சேர, சோழ, பாண்டிய, விஜயாக்கிரகங்களுக்கு சொந்தமானது. தமிழர்களாகிய நாம் இங்கே இந்தியாவில் மகத்தான மன்னர்களின் பாதையில் சனாதனவாதிகளாக இருக்கிறோம். ஆ.ராசாவுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அவர்களுக்கு மத்திய பதவியும் வேண்டும். தனி நாடும் வேண்டும். மக்களை ஏமாற்றும் போலிகள். இதுபோன்ற பேச்சுக்காக 2ஜி வழக்குடன் சிறை தண்டனை விதிக்க வேண்டும்” என்று சாடியுள்ளார்.

திமுகதான் காரணம்

“ஆ.ராசாவின் தனித் தமிழ்நாடு பேச்சு மத்திய அரசுடன் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இணக்கமான உறவை கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது” என்று டெல்லி அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

“மத்திய பாஜக அரசுடன் முதன்முதலில் மோதல் போக்கை தொடங்கியதே திமுக அரசுதான். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் வழக்கத்திற்கு மாறாக ஒன்றிய அரசு என்று கூறத் தொடங்கினர். முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட திமுக தலைவர்கள் அத்தனை பேருமே இப்படிப் பேசுவதும் எழுதுவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. மத்திய அரசுடன் சுமுகமான உறவை மேற்கொள்ளாத நிலையிலேயே ஒன்றிய அரசு என்று தொடர்ந்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பேசி வருகின்றன. இதை தமிழக காங்கிரஸ் கட்சியினர் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் தெரியவில்லை.ஏனென்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்தபோது, மத்தியஅரசு என்றே திமுக கூறி வந்துள்ளது.

பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற ஒரே நோக்கத்தோடு திமுக தலைவர்கள் இப்படி பேசி வருவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது. மத்திய அரசிடம் நிதியை கேட்டுப் பெறுவது என்ற நிலைமாறி போராடி பெறும் நிலைக்குத்தான் ஸ்டாலின் அரசு தள்ளப்படும்.

CM Stalin - Updatenews360

மேலும் நிதி நெருக்கடியை உருவாக்கி கொண்டதே திமுக அரசுதான். ஆட்சிக்கு வரும் முன்பு தமிழக அரசுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை இருப்பது தெரிந்தே அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கியாஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு, மாதாந்திர மின் கணக்கீட்டு முறை, மாணவர்களின் வங்கி கல்வி கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் என்று 20க்கும் மேற்பட்ட உடனடி பணம் பயன்பெறும் வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆனால் இப்போது மாநில அரசின் கடன் சுமை 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை கடந்துவிட்டது என்கிறார்கள். இதனால்தான் திமுக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை மக்களும், அரசு ஊழியர்களும் எப்போது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிலிருந்து திசை திருப்பும் நோக்கில் தனித்தமிழ்நாடு பற்றி ஆ ராசா பேசி இருக்கலாம் என்ற வாதமும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

தவிர திமுகவின் தனி நாடு கோரிக்கை மேற்கு வங்காளத்திலும் எதிரொலிக்கலாம். ஏனென்றால் அந்த மாநிலத்தில் பக்கத்து நாட்டை சேர்ந்த ஒரு கோடி பேர் சட்டவிரோதமாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

காங்கிரசுக்கு சிக்கல்

அதுமட்டுமின்றி தனிநாடு கேட்கும் ஒரு மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் போது காங்கிரசுக்கு வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்வது கடினமாக இருக்கும். ஏனென்றால் தனிநாடு கேட்கும் ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது என்ற பிரச்சாரத்தை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக தீவிரமாக முன்னெடுக்கும். அது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தலாம். அதனால் ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு முதலில் கண்டனம் தெரிவிக்க வேண்டியவர் ராகுல்தான். ஆனால் அவரோ வாய் மூடி மௌனியாகி விட்டார்.

அதேபோல் மதபோதகர் ஜெகத் கஸ்பர் கருத்தை அப்படியே ஆ ராசா பிரதிபலித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இன்னொன்று. ஆ ராசா கட்சியில் மதிப்பை இழந்ததால் மீண்டும் அனைவரின் கவனத்தையும் பெறும் முயற்சியாக ஸ்டாலின் முன்பாகவே இப்படி பேசி இருக்கவும் வாய்ப்பு உண்டு” என்றும் அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 803

    0

    1