அதிர்ச்சியில் சேகர் ரெட்டி குடும்பத்தினர்.. திருமணம் நெருங்கும் நேரத்தில் வருங்கால மருமகனுக்கு திடீர் மாரடைப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan20 December 2022, 1:08 pm
தொழிலதிபர் சேகர் ரெட்டி வருங்கால மருமகனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாடு அரசியலில் 2016- 2017 சமயங்களில் மிக பெரிய பேசு பொருளாக இருந்தவர் சேகர் ரெட்டி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேகர் ரெட்டி சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சார்பாக வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
இந்த நிலையில்தான் தற்போது சேகர் ரெட்டி தொடர்பான இன்னொரு பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. சேகர் ரெட்டி மகளுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மகன் சந்திரமவுலிக்கும் அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
சேகர் ரெட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை மண்டல ஆலோசனை குழு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் சந்திர மௌலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் உடனடியாக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளதால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சந்திரமௌலிக்கு 27 வயதுதான் ஆகிறது. திடீரென இப்படி மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் சேகர் ரெட்டி மற்றும் அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.