மாவுகளில் போதைப் பொருளை மறைத்து கடத்துவதில் கில்லாடி.. கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவின் ஷாக் பின்னணி!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2024, 12:10 pm

மாவுகளில் போதைப் பொருளை மறைத்து கடத்துவதில் கில்லாடி.. கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவின் ஷாக் பின்னணி!

போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் தலைமறைவாகினார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக கட்டுப்பாட்டில் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம், தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது. அதேபோல, கடந்த 2 ஆண்டுகளில் 4,500 கிலோ போதை ரசாயனங்களை கடத்தியது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், யார் யாருக்கெல்லாம் பணம் பட்டுவாடா செய்துள்ளார் என்பது குறித்த பட்டியலை தயாரித்த என்சிபி அதிகாரிகள், அவரிடம் துருவி துருவி கேள்வி எழுப்ப உள்ளனர்.

இதுகுறித்து டெல்லி என்சிபி அதிகாரி ஞானேஸ்வர் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: டெல்லி, தமிழகம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியாவுக்கு போதை பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி 25ம் தேதி போதை பொருள் வழக்கில் கைதான 3 பேரின் தகவலை அடுத்து, ஜாபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமான துறைகளில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருக்கிறது. இதுவரை 3 ஆண்டுகளில் 3500 கிலோ சூடோபெட்ரின் எனும் போதை பொருட்களை ஜாபர் கடத்தியுள்ளார்.

போதை பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை வைத்து மங்கை என்ற படத்தை தயாரித்துள்ளார். உணவு பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தை ஜாபர் வழங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, எனக் கூறினார்.

அதே போல சட்டவிரோத பப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது. போதைப் பொருள் கடத்தல் தெடர்பாக ஜாபர் சாதிக் சகோதரர்களான மைதின், சலீம் ஆகியோருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் நேற்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனுப்பினர்.

இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா என்பவரை சென்னையில் கைது செய்துள்ளனர். போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சதானந்தனை டெல்லிக்கு அழைத்து செல்ல உள்ளர். அவர் ஜாபர் சாதிக் தொழிலை பக்கவாக ஸ்கெட்ச் போட்டு செய்ததாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தேங்காய் பவுடர், உலர் திராட்சை, மாவுகளில் போதைப் பொருளை மறைத்து கடத்துவதில் கில்லாடி என கூறப்படுகிறது.

இதுவரை இந்த போதைக் கடத்தல் வழக்கு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5வது நபராக சதா என்கிற சதானந்தன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 232

    0

    0