நடுங்க வைத்த நாங்குநேரி சம்பவம்.. பேசும் மொழியால் அனைவரும் ஒரு தாய் மக்கள் : முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2023, 9:49 pm

நாங்குநேரி அருகே பள்ளி மாணவ, மாணவியான அண்ணன் தங்கை வீடு புகுந்து வெட்டிய சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நாங்குநேரியில் நடந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.

குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம்.

குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது.

பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 370

    0

    0