கருத்து சுதந்திரம் கூடாதா?இளையராஜாவுக்கு குரல் கொடுக்கும் பாஜக!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2022, 7:55 pm
மத்திய அரசின் அலுவலகங்களில் இந்தி இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமென்று என்று அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து கூறி இருந்தார். ‘இது மோடி அரசு இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணிக்க எடுக்கும் முயற்சி’ என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து கண்டனம் தெரிவித்தன.
அமித்ஷாவுக்கு பதிலளித்த ஏ.ஆர் ரகுமான்
இந்த நிலையில் அமித்ஷாவின் கருத்துக்கு மறைமுகமாக பதில் அளிப்பதுபோல பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற கவிதையில் வரும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டார். இருந்தார். அத்துடன் ‘ழ’கரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோ ஒன்றையும் பதிவிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ரகுமான் கூறும்போது, இந்தியா முழுவதும் தமிழ் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்று ஒற்றை வரியில் பதில் அளித்தார்.
இது அவருக்கு ஆதரவையும், எதிர்ப்பையும் சம அளவில் பெற்றுத்தந்தது. திமுக, விசிக கட்சி தலைவர்கள் ஏ.ஆர் ரகுமானை வெகுவாக பாராட்ட, இன்னொரு பக்கம்
நெட்டிசன்கள் தற்போதெல்லாம் அதிக சம்பளத்துக்காகவும், புகழுக்காகவும் தமிழ் படங்களை விட இந்தி சினிமா படங்களுக்கு ஆர்வத்துடன் இசையமைக்கும் ரகுமான் இப்படிப் பேசுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்று ஏளனமும் செய்தனர்.
மோடி குறித்து இளையராஜா விமர்சனம்
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்தை திமுக விசிக, மார்க்சிஸ்ட் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது.
அம்பேத்கராக மோடி
அதன் அணிந்துரையை எழுதியுள்ள இளையராஜா ”அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தையும், சிந்தனைகளையும் செயல்படுத்துபவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவைகளை மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அம்பேத்கரின் கருத்தும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயற்சிக்கிறது. முத்தலாக் தடை சட்டத்தால் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே மோடியை நினைத்து பெருமைக்கொள்வார்.
அம்பேத்கரும், மோடியும் இந்தியா பற்றி பெரிதாக கனவு கண்டவர்கள், செயலில் நம்பிக்கை கொண்டவர்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இசைஞானி கருத்துக்கு திமுக எதிர்ப்பு
இளையராஜாவின் இந்த கருத்துக்கு திமுக தலைவர்கள், நிர்வாகிகள், சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்ததுடன், ஏ ஆர் ரகுமான் போல, ஆஸ்கர் விருது பெற முடியவில்லை என்பதால்தான் பொறாமையில் இளையராஜா இப்படி எழுதி இருக்கிறார் என்று கிண்டலும் செய்தனர். தமிழக மார்க்சிஸ்ட் கட்சியும் இளையராஜாவை வன்மையாக கண்டித்துள்ளது.
விசிக தலைவர் கடும் விமர்சனம்
விசிக தலைவர் திருமாவளவன் கூறும்போது, ‘சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை சந்திப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம். அவர்கள், அப்படித்தான் இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன். ‘அம்பேத்கர் – மோடி சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்களும்’ என்ற புத்தகத்தை கொடுத்து அணிந்துரை கேட்டிருக்கிறார்கள். அவரும் இரண்டு பக்கம் எழுதிக் கொடுத்திருக்கிறார். அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என இசைஞானி சொல்லியிருக்கிறார். அவர் இருந்திருந்தால் இந்தியாவின் திசையே மாறியிருக்கும். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். இளையராஜா பாவம் என்று இரக்கம் காட்ட விரும்புகிறேன்” என்று கேலி செய்தார்.
இப்படி இளையராஜாவை பொதுவெளியில் பலரும் போட்டுத்தாக்குவது
தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு பெரும் வேதனையை கொடுத்துள்ளது. இதையடுத்து உடனே அவர், தனது ஆதங்கத்தை ட்விட்டரில் கொட்டினார்.
ஆளுநர் தமிழிசை வேதனை
“இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?…
கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும்தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே !!!!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆவேசம்
இளையராஜா மீது வைக்கப்படும் இடைவிடாத கடும் விமர்சனங்களைக் குறிப்பிட்டு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.
“இளையராஜா சார் என்ன குற்றம் செய்தார்?… அறிவாலய சுற்றத்திற்கு பிடிக்காத கருத்துதான் குற்றமா?… இந்திய அரசியலமைப்பு சட்டம் கருத்து சுதந்திரத்தை அனுமதித்திருக்கிறது. இளையராஜா கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பிரதமர் மோடி குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அது அறிவாலயத்தில் விருப்பப்படி இல்லாததுதான் அறிவாலயத்தில் விருப்பப்படி கருத்து தெரிவிக்காதது தான் இளையராஜா செய்த குற்றமா? திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தன்மையைக் காட்டி இருக்கிறது’’ என்றும் கண்டித்து இருக்கிறார்.
இளையராஜாவுக்கு பொன்.ராதா ஆதரவு
பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், ’’இளையராஜாவின் அணிந்துரையை களங்கப்படுத்தி கொச்சைப்படுத்துவோரை காணும்போது யானை தன் தலையில் தானே-வாரி போட்டுக் கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் “மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்பப் பெற மாட்டேன். முழுமையாக அந்தப் புத்தகத்தைப் படித்து பிறகே அணிந்துரை கொடுத்தேன்”
என இன்று இளையராஜா உறுதிபட அறிவித்து அதிரடி காட்டி இருக்கிறார்.
அரசியல் ஆர்வலர்கள் கருத்து
இளையராஜா மீதான விமர்சனம் குறித்து சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறும்போது, “தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இளையராஜா மீது ஆவேசமாக பாய்ந்து இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள 78 வயது இளைய ராஜா பட்டியலின வகுப்பை சேர்ந்தவர். பூர்வீகம் தேனி மாவட்டம். 1960 முதல் 1968-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் தனது இரு சகோதரர்களுடன் பயணம் செய்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கேற்றவர். இவற்றில் பெரும்பாலானவை கம்யூனிச சித்தாந்தங்கள் கொண்டவை.
1976ல் அன்னக்கிளி மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான பின்பு அவருடைய முழு அர்ப்பணிப்பும் சினிமாவுடன் ஐக்கியமானது.
பொதுவாக இளைய ராஜா எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ள விரும்பாதவர்.
அதேநேரம் ஒளிவுமறைவின்றி பேசக்கூடியவர். அதில் உறுதியாக இருப்பவரும் கூட.
அதனால் தான், அண்ணல் அம்பேத்கர்- பிரதமர் மோடி குறித்த ஒப்பீட்டு ஆய்வில் தன் மனதில் பட்டதை அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இசைஞானி vs இசைப்புயல்
45 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரையுலகில், கோலோச்சி வரும் இளையராஜாவை ஏ ஆர் ரகுமான் மீது உள்ள பொறாமையால் இப்படி கூறுகிறார் என்று விமர்சிப்பதும் சரியல்ல. ஏனென்றால் அவருக்கு முன்பாகவே உலக அளவில் இளையராஜா புகழ் பெற்றுவிட்டார்.
மேலும் அமர்ந்த நிலையில் அமைதி உருவில் பார்த்த தமிழன்னையை, ஏ ஆர் ரகுமான் தலைவிரி கோலத்துடன் படமாக வெளியிட்டபோது அதை திமுகவோ அதன் கூட்டணி கட்சியினரோ, தமிழ் அறிஞர்களோ யாரும் கண்டிக்கவில்லை. மாறாக பாராட்டவே செய்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அது ஏ ஆர் ரகுமானின் கருத்து சுதந்திரம் என்று ஆதரவு குரலும் கொடுத்தனர். அப்படி இருக்கும்போது, இளையராஜா சொன்னது மட்டும் எப்படி கருத்து சுதந்திரத்தை மீறியதாக ஆகும்?…
பொறுத்துக்கொள்ள முடியாத தலைவர்கள்
இந்த விஷயத்தில் இளையராஜாவின் பின்புலத்தை திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆய்வு செய்வதால் அவர் அண்ணல் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு கூறுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றே கருதத் தோன்றுகிறது.
இங்கே, தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பை ஆக்ரோசமாக எதிர்க்கும் கட்சியினர் தங்களைப் பற்றிய பெருமைகளை இந்தி பேசாத மாநில மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படி இந்தியில் விளம்பரமாக வெளியிடுவது வேடிக்கையிலும் வேடிக்கை! “என்று குறிப்பிட்டனர்.