பாடகி சின்மயி கடிதம்: திணறும் திமுக அரசு! மீண்டும் வெடித்த வைரமுத்து சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2023, 9:54 pm

டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள், பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் வைத்த விமர்சனம் தற்போது அவருக்கே தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதுடன் விவாதத்துக்குரிய விஷயமாகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மல்யுத்த வீரர்கள் போராட்டம் : ஸ்டாலின் ஆதரவு

ஸ்டாலின் அந்த பதிவில், மோடி அரசை மட்டுமின்றி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்ட தமிழகத்தின் செங்கோல் குறித்தும் மறைமுகமாக கிண்டலடித்து இருந்தார்.

அவர் கூறும் போது,”பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் – தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி ஆவேச குரல் கொடுத்ததால் அந்த செய்தி அத்தனை ஊடகங்களிலும் வெளியானது. தமிழக பெண்களிடையே பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. முதலமைச்சர் நியாயமான கேள்வியைத்தான் எழுப்பி இருக்கிறார் என்று திமுக மகளிரணியினரும் புகழ்ந்தனர்.

சின்மயி கிடுக்குப்பிடி

இந்த பதிவை படித்ததும் பிரபல பாடகி சின்மயியும் மனம் மகிழ்ந்தார். உடனடியாக, தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆங்கிலத்தில் விரிவான கடிதம் ஒன்றையும் எழுதினார். அதில் அவர் சில நியாயமான கேள்விகளையும் எழுப்பி இருப்பதால் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் அவருடைய பதிவு பெரும் புயலை கிளப்பி விட்டு இருக்கிறது.

சரி, அப்படி சின்மயி என்னதான் எழுதி இருக்கிறார்?…

“பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் ஆதரவு வெளியிடுவது அற்புதமான விஷயம். அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்கும்போது. மாற்றம் நடக்கும் என்ற நம்பிக்கை பிறக்கும். எனினும், சினிமாத்துறை போன்ற பல தொழில்களில் பாலியல் குற்றங்களை விசாரிக்க இதுவரை எந்த அமைப்பையும் ஏற்படுத்தவில்லை.

வைரமுத்துவுக்கு மட்டும் ஏன் ஆதரவு?

உங்கள் நண்பரும் ஆதரவாளருமான வைரமுத்து மீது 17க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அவர், இன்னும் உங்களுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார். தனக்கு எதிராகப் பேசும் பெண்களை வாய்மூட வைக்க, உங்களுடனான நெருக்கத்தை அவர் பயன்படுத்தி வருகிறார்.

உங்கள் கட்சி மற்றும் பிற அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிகளில் அவர் இப்போதும் பங்கேற்று வருகிறார். வைரமுத்து மீது நான் பாலியல் புகார் அளித்திருக்கிறேன். இதனால், தமிழ்த்திரையுலகில் ஏறக்குறைய 5 ஆண்டுகளாக எனக்கு தடை இருந்து வருகிறது. நான் தொடர்ந்த வழக்கு, சென்னை சிவில் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை. அதிகார செல்வாக்கு கொண்டவர்களுடன் நெருக்கம் இல்லாத நிலையில், இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும், நீதிக்காகப் போராட எனக்கு சக்தி உள்ளது.

2018-19ல், தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்தேன். ஏனென்றால், எங்களைப் போன்றவர்களுக்கு அதுதான் ஒரே வாய்ப்பு. வீட்டுக்கு வந்து விசாரித்த போலீஸ் அதிகாரிகளிடம், எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்துள்ளேன்.

வைரமுத்துவுக்கு எதிராக அவரது போன் அழைப்பு ஆதாரங்கள் உள்ளிட்ட சூழல் சாட்சியங்கள் என்னிடம் போதுமான அளவில் உள்ளன. அவரது மகன் மதன் கார்க்கிக்கும் இதுபற்றி டெக்ஸ்ட் மூலம் தகவல் அளித்தேன். பின்னர் என்னிடம் பேசிய அவர், தனது தந்தையின் இப்படிப்பட்ட நடத்தை குறித்து அவரது குடும்பத்துக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்று ஒப்புக்கொண்டி இருக்கிறார்.

வைரமுத்துவுக்கும், பிரிஜ் பூஷண் எம்பிக்கும் வெவ்வேறு விதிகள் இருக்க முடியாது. ஒரு மைனர் சிறுமி உள்ளிட்ட மல்யுத்த சாம்பியன்கள், பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், 17க்கும் மேற்பட்ட பெண்கள், பாலியல் புகார் அளித்துள்ள நிலையிலும், வைரமுத்து உங்களுடனும் உங்கள் கட்சியுடனும் உள்ள நெருக்கத்தை, என்னையும் பிறரையும் வாய்மூட வைக்க பயன்படுத்தி வருகிறார். திறமைகளும் வாழ்க்கை கனவுகளும் நிறைத்த பெண்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தி வருகிறார். இவை எல்லாமே, உங்கள் கண் முன்பே நடக்கிறது. தயவுசெய்து, தமிழகத்தில் உள்ள பணியிடங்களைப் பாதுகாப்பானவையாக மாற்றுங்கள். வைரமுத்துவின் அரசியல் செல்வாக்கால், அவருக்கு எதிராகப் பேச எல்லோருமே மிகவும் பயப்படுகிறார்கள். அவர் மீது புகார் அளிக்கவே கூடாது என சொந்த துறையினராலேயே தடுக்கப்படுபவர்களில் ஒருவராகத்தான், இதையெல்லாம் குறிப்பிடுகிறேன்.

சினிமாத்துறையில் பலரும் இப்போதும் பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்து வருகின்றனர் எனவே, அனைத்துப்பிரிவுகளிலும், பாலியல் குற்ற விசாரணை அமைப்பு இருப்பதை உறுதிசெய்யுங்கள்” என்று சின்மயி மனம் உருகி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சின்மயிக்கு அண்ணாமலை ஆதரவு

இந்தக் கடிதத்தின் நகலை திமுக துணை பொதுச்செயலாளரும், பெண்ணுரிமை போராளி என்று வர்ணிக்கப்படும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழிக்கும்
பாடகி சின்மயி அனுப்பி வைத்து இருக்கிறார்.

இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கவிஞர் வைரமுத்து மீது இதுவரை 19 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. பாடகி சின்மயி உள்ளிட்டோர் அவர் மீது குற்றம் சாட்டியிருக்கின்றனர். ஆனால் இது குறித்து வைரமுத்து மீது இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

ஆனால் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளில் பாஜக எம்.பி மீது 2 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்தால்தான் அது குறித்து பேசுவேன் என்பது தவறான ஒன்று.

இதுவரை ஜந்தர்மந்தரில் அவர்கள் போராட்டம் நடத்த முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் இரு நாட்களுக்கு முந்தைய சம்பவத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணியாக சென்றதால், டெல்லி காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்” என்று குறிப்பிட்டார்.

திமுக அரசுக்கு நெருக்கடி

“கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தற்போது அண்ணாமலையும் கையில் எடுத்திருப்பது திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது”
என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“முதலமைச்சர் ஸ்டாலின் மோடி அரசு மீது வைத்த விமர்சனம் திமுகவை தீவிரமாக ஆதரிக்கும், நேசிக்கும் கவிஞர் வைரமுத்து மீதே திரும்புவதற்கு வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது.

விஸ்வரூபம் எடுக்கும் வைரமுத்து விவகாரம்?

இதை ஸ்டாலின் இதுவரை கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டது போல் இனியும் நழுவ முடியுமா?…என்பது சந்தேகம்தான். ஏனென்றால் பாடகி சின்மயி மற்றும் 18 பெண்கள் வைரமுத்து மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இப்போது பிடித்துக் கொண்டுவிட்டார். இனி அதிமுக போன்ற கட்சிகளும் இது பற்றி குரல் எழுப்பும் என்பது நிச்சயம். அதே நேரம் தேர்தலின்போது இது அரசியல் பிரச்சாரமாக மாறும் வாய்ப்புகளும் அதிகம்.

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை பாடகி சின்மயி பொதுவெளியில் தொடர்ந்து வைத்து வருவதால் தன்னம்பிக்கையுடன் அவர் உறுதியாக இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் இப் பிரச்சனை காரணமாக எழும் விமர்சனங்களைப் பற்றி சின்மயி கவலை கொள்ள மாட்டார் என்பதும் நிச்சயம். இதை தனக்கு வலு சேர்க்கும் கருத்தாகவே அவர் பார்ப்பார்.

வைரமுத்து கைது ஆவாரா?

அதேநேரம் வைரமுத்து என்ற பெயரை கேட்டாலே தமிழக பெண்களுக்கு எரிச்சலும், அச்சமும்தான் வரும். இது அவருக்கு திரையுலகில் 40 ஆண்டுகளாக கிடைத்த நற்பெயரை களங்கப்படுத்தவே செய்யும்” என்றும் அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் வைரமுத்து மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?… அவர் கைது செய்யப்படுவாரா?…என்ற கேள்விகளும் எழுகின்றன.

இந்த இடியாப்ப சிக்கல் விவகாரத்தில் திமுக அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 605

    1

    0