தமிழகத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை : நேற்று திருவள்ளூர்… இன்று சிவகாசி… தொடரும் சோகம்…!!

Author: Babu Lakshmanan
26 July 2022, 9:47 pm

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13ம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் சட்டப்போராட்டம் நடத்திய நிலையில், 10 நாட்களுக்கு பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, நீட் தேர்வு முடிவு அச்சத்தால் திருவள்ளூரில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை திருவள்ளூர் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சேரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும், 12ம் வகுப்பு படித்த திருத்தணி தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் மகள், தங்கி இருந்த தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதேபோல, நேற்று விக்கிரவாண்டி அருகேயுள்ள சூர்யா கல்வி குழுமத்தில் பாராமெடிக்கல் துறையில் பயின்று வந்த ரம்யா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் தொடர்ந்து விபரீத முடிவை எடுத்து வருவது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய மாணவி, பள்ளி சீருடையுடன் உயிரை மாய்த்துக் கொண்டார். மாணவியின் மரணத்திற்கு என்ன காரணம்..? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 770

    0

    0