எடப்பாடி பழனிசாமி சொல்வது 100% உண்மை… எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை… சமூக ஆர்வலர் முகிலன் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan28 March 2022, 6:51 pm
கரூர் : தமிழக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் புகார் முற்றிலும் உண்மை என்றும், தமிழகத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் இன்றும் இயங்கி வருவதாக சமூக நல ஆர்வலர் முகிலன் குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்., தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் சார்பில் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. முன்னதாக சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், குத்தகை காலம் முடிந்தும் உரிம காலம் முடிந்தும் இன்றும் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முழுக்கங்கள் எழுப்பட்டன.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கனிமக்கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் கூறியதை வரவேற்று, கடந்த 2021 ம் ஆண்டு வாழ்த்து தெரிவித்ததனை சுட்டிக்காட்டி, இன்னும் ஏராளமான கல்குவாரிகள் இன்றும் இயங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, அதற்கான மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.
மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமூக ஆர்வலர் முகிலன் கூறியதாவது :- கர்நாடகா அரசு, தொடர்ந்து அடாவடி தனமாக மேகதாதுவில் அணைகட்டும் நிலையை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதே போல, கேரள அரசு, முல்லைப்பெரியாறு அணை, பாதுகாப்பாக இருக்கின்றது என்று கூறியும் மனப்பாங்கில் செயல்பட்டு வருகின்றன. ஆகையால் தமிழக அரசு இதற்காக அனைத்து கட்சிகளில் இணைந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால் இதுமட்டும் போதாது என்று நாங்கள் கருதுகின்றோம்.
ஆகையால் முல்லைப்பெரியாறு அணை கட்டுகின்ற பகுதி தமிழகத்தினை சார்ந்தது. மேலும், காவிரி உருவாகும் குடகுமலை, தமிழ்நாட்டினை சார்ந்தது. ஆகவே, மொழி வாரியாக உருவான மாநிலங்களில் தமிழகத்திற்கு சொந்தமான பகுதிகளை கேட்டு பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார். தமிழகத்தினை பாழ் ஆக்குவதற்காக, மற்ற மாநிலங்கள் இந்த போக்கினை செய்து வருகின்றன.
கரூர் மாவட்டத்தில் மட்டும் 3 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இல்லை. ஆனால், கரூர் மாவட்டத்தினை சுற்றியுள்ள மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் தனது சொந்த முயற்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே லைசன்ஸ் முடிந்தும் கல்குவாரிகள் இன்றும் இயங்கி வருகின்றன. மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு புகார் தெரிவித்தார். அதில் தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகள் இயங்கி வருகின்றன என்றும் கல்குவாரிகள் அப்படியே இன்னும் இயங்கிவருகின்றன என்றும் கூறியிருந்தார். அந்த புகார் உண்மையானதாகும், இன்றும் அந்த புகார் அப்படியே தான் உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.