திமுக ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பில்லை… திமுகவிடம் அடிமையாக இருக்கும் கூட்டணி கட்சிகள் ; எஸ்பி வேலுமணி பாய்ச்சல்
Author: Babu Lakshmanan3 January 2023, 3:40 pm
கோவை ; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் காலை போட்டோ ஷுட் செய்வதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.
சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று அதிமுக சார்பில் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு உள்ளனர். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் தொண்டாமுத்தூர் பேரூராட்சி சார்பில் தொண்டாமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விலை வாசி உயர்வை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கண்டன உரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் காலை போட்டோ ஷுட் செய்கிறார். கோவை மாவட்டத்தையும் குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதியை புறக்கணிக்கிறது இந்த திமுக அரசு. மேலும் எடப்பாடியார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வருகிறார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை புதிதாக வந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொண்டாமுத்தூர் தொகுதியில் குடிநீர் உட்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக ஆட்சி வந்ததும் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை என பலவற்றில் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கின்றனர்.
மேலும், திமுக தேர்தல் வாக்குறுதியின் பொழுது குடும்ப தலைவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அளிப்பதாக கூறினார்கள். அப்படி பார்த்தால் இதுவரை 18 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்திவிட்டனர். மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பிடங்களை சரிவர பராமரிப்பது இல்லை.
மேலும் நேற்றைய தினம் திமுக கூட்டத்தில் பெண் போலீசார் ஒருவருக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது. திமுக ஆட்சியில் போலீசாருக்கு கூட உரிய பாதுகாப்பு இல்லை. திமுக நிர்வாகிகளின் பேச்சைக் கேட்டு காவல்துறையினர் செயல்பட வேண்டாம். காவல்துறையை தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.
மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமாகி விட்டது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அனைத்து தொகுதிகளிலும் வென்று காட்டுவோம். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அனைத்து தொகுதிகளையும் வென்று காட்டுவோம். கோவையை மேம்படுத்துவோம்.
மேலும் மு. க. ஸ்டாலின் குடும்பம் பல கோடிகளை கொள்ளையடித்து விட்டு தங்கள் மீது வழக்கு போடுகின்றனர். மேலும், திமுக உடனான கட்சிகள் அனைத்தும் அடிமை கட்சிகளாக உள்ளன. திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வராது. இருக்கின்ற போது மக்களுக்கு நன்மைகள் செய்யுங்கள், என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக அரசின் விலை உயர்வை குறைக்க வேண்டும். மேலும் கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு திமுகவால் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை எல்லாம் செயல்படுத்த வேண்டும். இந்த 18 மாதங்களில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு எதனையும் செய்யவில்லை. தற்போது உள்ள சூழலில் பல்வேறு ஊடகங்கள் திமுக அரசை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த ஊடகங்கள் கைவிட்டால் திமுகவினர் போய்விடுவார்கள்.
அடிமை என்றால் திமுகவுடனான கட்சிகள் அடிமைகள். திமுக எது கூறினாலும் உதாரணத்திற்கு குட்டிக்கரணம் போட சொன்னாலும் குட்டிக்கரணம் போடுகின்றனர். தற்பொழுது, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் திமுகவிற்கு அடிமைகளாக உள்ளன. மேலும், திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது, எனக் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டாமுத்தூர் பேரூராட்சி கழக செயலாளர் சங்கர் தலைமை பொறுப்பு வகித்தார். இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு வருகை புரிந்த எஸ்பி வேலுமணிக்கு தலையில் கிரீடம் வைத்தும் மாலை அணிவித்தும் வரவேற்பளிக்கப்பட்டது.