32,500 சதுர அடியில் 400 கிலோ தானியம்…சிறகடித்த பிரம்மாண்ட சிட்டுக்குருவி: விழிப்புணர்வு ஏற்படுத்தி சாதனை படைத்த மாணவர்..!!
Author: Rajesh20 March 2022, 5:27 pm
புதுச்சேரியில் சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர் ஒருவர் 32,500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களை கொண்டு சிட்டுக்குருவியின் பிரமாண்ட உருவப்படத்தை உருவாக்கி கலாம் உலக சாதனை படைத்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார்குப்பம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்18. இவர் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசிஇ முதலாமாண்டு படித்து வருகிறார்.
ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுதும் வகையில், புதுச்சேரியில் விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் சேதிலால் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் 32,500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களை கொண்டு 125 அடி அகலம், 260 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான சிட்டு க்குருவியின் உருவப்படத்தை உருவாக்கி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
முதலில் சிட்டுக்குருவியின் உருவப்படத்தை வரைந்து, பின்னர் அவற்றில் அரிசி, கோதுமை, உளுந்து, பச்சை பயிறு ஆகிய தானியங்களை தூவி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். மாணவரின் இந்த முயற்சியை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழ் வழங்க இருக்கிறது. மாணவரின் இந்த சாதனை முயற்சிக்கான ஏற்பாடுகளை விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை தலைவர் பிரேம்குமார் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.