‘பாலம் எங்கே…? என்னை ஏமாத்த பாக்குறீங்களா..? இது தப்பு தம்பி’… நீர்வளத்துறை அதிகாரிகளை வெளுத்து வாங்கிய சபாநாயகர்!!
Author: Babu Lakshmanan13 October 2022, 1:14 pm
தூத்துக்குடி ; சாத்தான்குளம் அருகே நதிநீர் இணைப்பு திட்ட பணியில் பாலமே கட்டாமல் அனைத்து பணிகளும் முடிவுற்றது எனக் கூறிய நீர்வளத்துறை அதிகாரிகளை சபாநாயகர் அப்பாவு கடிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பஞ்சாயத்துக்குட்பட்ட எம்.எல் தேரியில் 12.21 கோடி மதிப்பீட்டில் 4300 மீட்டர் நீளத்தில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்ட பணிகளில் கால்வாய் அமைக்கும் பணியை தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அந்த சமயம், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தனசேகரன் என்பவரிடம் அப்பாவு, இதில் நடக்கும் பணிகள் குறித்து முன்கூட்டியே எனக்கு ஏன் கூறவில்லை என கேட்டார்.
அதற்கு உதவி செயற் பொறியாளர் தனசேகரன் இந்தப் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஒரு சிறிய பிரச்சனை உள்ளது எனக் கூறியதும், “என்ன பிரச்சனை…? நான் என்ன விவகாரம் செய்ய சண்டைக்கு ஆள் வைச்சா கூட்டிட்டு வந்திருக்கேன்…? என்கிட்ட ஏன் சொல்லல…? என்கிட்ட சொல்லாத அளவுக்கு இங்க என்ன பாகிஸ்தான் தீவிரவாதியா இருக்கான்…? என அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
மேலும் அதே நீர்வளத்துறை அதிகாரி, சபாநாயகரிடம் அப்பகுதியில் பாலம் கட்டாமல் இருந்ததை மறைத்து அனைத்து பணிகளும் முடிவுற்றது என கூறியுள்ளார். ஆனால் சபாநாயகர் அப்பாவு நேரில் வந்து பார்வையிட்ட போது, அப்பகுதியில் பாலம் எதுவும் கட்டப்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் அப்பாவு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தனசேகரனிடம், “பாலம் கட்டாமல் இருப்பதை ஏன் என்னிடம் முன்கூட்டியே சொல்லவில்லை…? என்னை ஏமாற்றவா பாக்குறீங்க…? இது தப்பு தம்பி…! எனக்கு இந்த ஊரை பத்தி ஒன்னும் தெரியாதுன்னா நினைச்சுட்டீங்க…! இப்படி எல்லாம் செய்யக்கூடாது தம்பி..! என நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தனசேகரனை கடிந்து கொண்டார்.
இதனால் சபாநாயகரிடம் வசமாக மாட்டிக் கொண்ட நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் தனசேகரன் செய்வதறியாது விழி பிதுங்கி நின்றார்.
பாலமே கட்டாமல் அனைத்து பணிகளும் முடிவுற்றது எனக் கூறி சபாநாயகரை ஏமாற்றப் பார்த்த நீர்வளத் துறை அதிகாரியை சபாநாயகர் கடிந்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.