உணர்ச்சிவசப்பட்டு விட்டார் ஆளுநர்… 4 மணிநேரத்தில் அதிகாரம் என்ன-னு தெரிஞ்சிருப்பாரு ; சபாநாயகர் அப்பாவு பதில்…!!
Author: Babu Lakshmanan30 June 2023, 12:09 pm
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவி உணர்ச்சிவசப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட ஆளும் கூட்டணி கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், சிறிது நேரத்தில் அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் ஆர்என் ரவி மறு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில், ஆளுநரின் இந்த செயல் குறித்து சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.
அவர் பேசியதாவது ;- ஆளுநர் ஒருவருக்கு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்பதை நான்கரை மணி நேரத்தில் தெரிந்துகொண்டனர். அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது. ஆளுநருக்கு எந்தெந்த உரிமைகள் உள்ளது என்பதை சமீபத்தில் கூட உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. யாரெல்லாம் அமைச்சராக செயல்படுவார்கள் என்ற பரிந்துரையை முதலமைச்சர் ஆளுநரிடம் கொடுப்பார். அந்த பரிந்துரையை ஏற்று ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். அவ்வளவு தான். அந்த பதவியை அமைச்சர்கள் தானாக ராஜினாமா செய்யலாம், அல்லது பதவியை விட்டு விலக முதலமைச்சர் அறிவுரை கூறலாம்.
இதை தவிற யாருக்கும் உரிமை கிடையாது. அதற்கு மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் தண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். ஆளுநர் நல்லவர். உணர்ச்சிவசப்பட்டு, உணர்வின் வெளிப்பாடு காரணமாக் அவர் நேற்று இத்தகைய நடவடிக்கை எடுத்திருக்கலாம். சட்டத்தின்படி அவர் நடந்தால் அவர் அளித்துவரும் பதவிக்கு மாண்பாக இருக்கும், எனக் கூறினார்.