பெண்ணின் முகத்தில் ஸ்ப்ரே அடித்து தங்க சங்கிலி அபேஸ்: கையும் களவுமாக மாட்டிய நூதன திருடி..!!

Author: Rajesh
12 February 2022, 10:01 am

கோவை: கோவையில் கிஃப்ட் வாங்குவது போல் நடித்து பெண்ணின் முகத்தில் கரப்பான் பூச்சி மருந்தை அடித்து செயினை திருட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி செல்வராணி (57). இவர்கள் அதே பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் அருகே பேன்சி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை செல்வராணி மட்டும் கடையில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது கிஃப்ட் வாங்குவது போல் பெண் ஒருவர் வந்தார். செல்வராணியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்த அந்த பெண் திடீரென கரப்பான் பூச்சி ஸ்பிரேவை எடுத்து செல்வராணியின் முகத்தில் அடித்தார். பதறிப்போன செல்வராணி கூச்சலிட்டார். அதற்குள் அந்த பெண் செல்வராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே ஓடினார்.

செல்வராணி மீண்டும் கூச்சலிடவே ஓட முயன்ற அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், இதுகுறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவர் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சரவண ரவி என்பவரது மனைவி தவமணி (36) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். பட்டப்பகலில், ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பெண் ஒருவர் வியாபாரியின் முகத்தில் பூச்சி மருந்து அடித்து செயினை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!