ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது: தொடரும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்..!!
Author: Rajesh8 February 2022, 9:51 am
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்காக வந்துள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 16 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படையினர் மேலும் 16 மீனவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.