ஆளுநர் ஆர்.என். ரவி அடுத்தடுத்து கொளுத்திப் போட்ட வெடி… கொதிக்கும் திமுக, மதிமுக!
Author: Babu Lakshmanan7 April 2023, 4:59 pm
ஆளுநர்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு திருக்குறள் நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பில் திட்டமிட்டே கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் தலைப்பு மறைக்கப்பட்டது குறித்து தெரிவித்த கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேபோல அவர் இந்திய கலாச்சாரத்தின் தொன்மையான சனாதன தர்மம் பற்றி பெருமைப்பட கூறியதை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன.
அதன் பிறகு ஆளுநர் பற்றிய சர்ச்சைகள் அதிக அளவில் எழவில்லை. தமிழ்நாட்டை தமிழகம் என்று அவர் குறிப்பிட்டது மட்டுமே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பின்னர் அதையும் அவர் திருத்திக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து அமைதி காத்து வந்த ஆளுநர் ரவி கோவையிலும், சென்னையிலும் அடுத்தடுத்த நாட்களில் பேசியது திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் கதி கலங்க வைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கோவை நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ரவி பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு பட்டியல் இன மக்களின் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த கொடூரம் பற்றி மறைமுகமாக கவலை தெரிவித்து இருந்தார்.
அவர் பேசும்போது, “சமூக நீதிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும், மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக நீதி சார்ந்த பிரச்சனைகளையும் செய்தித்தாள்களில் காண முடிகிறது. ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவினைவாத அரசியலை தவிர்த்தால்தான் சமூக பிரச்சனைகளை சரி செய்ய முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருதவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஆளுநர் ரவி வேங்கை வயல் நிகழ்வு குறித்து வேதனைப்பட்டபோது இந்தியாவில் எங்களை விட்டால் சமூக நீதிபற்றி பேச வேறு கட்சியே கிடையாது என 70 ஆண்டுகளாக மார்தட்டிக் கொண்டு வரும் திமுகவோ அல்லது பட்டியலின மக்களுக்கு எந்த மாநிலத்திலாவது அநீதி இழைக்கப்பட்டால் அதற்காக உடனே கொந்தளிக்கும் திருமாவளவனின் விசிகவோ, மார்க்சிஸ்ட்டோ, மதிமுகவோ, திராவிடர் கழகமோ எதிர்வினை ஆற்றவே இல்லை.
இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் எதிலுமே இது போன்றதொரு வன்கொடுமை யாருக்கும் இழைக்கப்பட்டது இல்லை என்று கூறப்படுவதால் திமுக ஆட்சியில் இப்படியொரு அவலம் நடந்து விட்டதே… இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லையே? என்று மனதுக்குள் கனன்றதுடன் அந்த கட்சிகள் அப்படியே கப்சிப் ஆகி விட்டன.
ஸ்டெர்லைட் போராட்டம்
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி, தமிழக அரசியலில் சூறாவளியை கிளப்பும் விதமாக மேலும் இரண்டு தகவல்களை அண்மையில் வெளியிட்டார்.
கிண்டி ஆளுனர் மாளிகையில் இந்திய குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுனர் ரவி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறித்து இதுவரை யாரும் தெரிவிக்காத ஒரு பகீர் தகவலையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலமாக வரும் நிதிகளை முறைப்படுத்தவேண்டும் என்பது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுனர், ”வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் பலவும் முறையாகப் பயன்படுத்தப்படாமல் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. நமது நாடு வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்தவேண்டும் என்று பல்வேறு நாடுகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூடங்குளம் அணு உலை, விழிஞ்சம் துறைமுக திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்திலும் வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தமான நிகழ்வு.
வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை வெளிநாட்டு நிதி நாட்டுக்கெதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எப்.சி.ஐ நிதியை முறைப்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டார்.
பின்னர் சட்டப்பேரவை தீர்மானங்கள் குறித்த கேள்விக்கு அவர், ”சட்டப்பேரவை தீர்மானங்களை ஆளுனர் நிலுவையில் வைத்திருந்தால், அதற்கு நாகரீகமாக நிராகரிக்கப்பட்டது என்று பொருள். நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்று பொருள் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறுகிறது” என்று கருத்து தெரிவித்தார்.
முதலமைச்சர் காட்டம்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஏன் நிலுவையில் உள்ளன என்பதற்கு ஆளுநர் தெரிவித்த கருத்து ஆளும் கட்சியான திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கடும் எரிச்சலை கொடுத்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் ரவியை சாடியதுடன் நீண்டதொரு அறிக்கையும் வெளியிட்டார்.
மேலும் அவர் தனது பதிவில், “உண்மைக்குப் புறம்பான – சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசுவதும் அரசியல் சட்ட வரையறையை மீறிச் செயல்படுவதும் ஆளுநருக்கு மாண்பல்ல! மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர்! அவர்
மிகப் பெரிய சர்வாதிகாரி அல்ல! கருத்துகளைத் திரும்பப் பெற்று, ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு உண்மையாக நடப்பார் என நம்புகிறேன்” ஆவேசப்பட்டிருந்தார்.
அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஆளுநர் ரவி தமிழகத்தை விட்டு உடனே வெளியேறவேண்டும் என்று கொந்தளித்து உள்ளனர். திருமாவளவன் இதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது ஜனநாயக சக்திகளின் கடமை என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால் இவர்களில் யாருமே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை தூண்டி விட வெளிநாடு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி ஆளுநர் குறிப்பிட்டதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.
என்றபோதிலும் ஆளுநர் கூறிய சிறிது நேரத்திலேயே தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி எம்பி கனிமொழிக்கு கோபம் கொப்பளித்தது. உடனடியாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநர் ஆதாரங்களைத் தர வேண்டும்; மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரைக் கண்டிக்கிறேன்” என்று காட்டமாக பதிவிட்டார்.
வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம். வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகாரத் திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் ஆளுநர்.
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் ஆளுநர் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து ஆளுநர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள். நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்துவிட்டன.
சட்டப் பேரவை தீர்மானத்தை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாகிவிடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
ரகசிய நடவடிக்கை
இதுகுறித்து அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறுவது இதுதான்.
“ஆளுநர் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்தவர். அங்குள்ள போராளி குழுக்களை கட்டுப்படுத்தி அமைதிப் பாதைக்கும் திருப்பியவர்.
அத்துடன், மத்திய உளவுத்துறையில் நீண்ட காலம் மிக முக்கிய பொறுப்பில் இருந்ததால் நாட்டில் நடக்கும் சில தொடர் போராட்டங்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது, அது யார் யாருக்கு போய் சேருகிறது, அதனால் அந்த போராட்டம் எப்படி தீவிரம் அடைகிறது என்பதை அவர் துல்லியமாக அறிந்திருக்கும் வாய்ப்புகளும் அதிகம்.
அந்த அடிப்படையில்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டமும் தூண்டி விடப்பட்டது என அவர் கூறியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
தூத்துக்குடி எம்பி கனிமொழியும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி வந்ததற்கான ஆதாரங்களை ஆளுநர் ரவி வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
நிச்சயமாக தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் ஆளுநர் ரவி இப்படி பேசி இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியை முழுமையாக அறிந்து கொண்டிருப்பார். ஒருவேளை தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவே கூட மத்திய அரசு அவரை தமிழக ஆளுநராக நியமித்து இருக்கலாம்.
தவிர தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 99 நாட்கள் அமைதியாகத்தான் சென்றது. ஆனால் 100வது நாளான 2018 மே 22ம் தேதி அன்று காலை போராட்டக்காரர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்கியதால்தான் கலவரமே வெடித்தது. துப்பாக்கி சூடும் நடந்தது. அதனால் இதன் பின்னணியில் அந்நிய நாடுகள் சிலவற்றின் தூண்டுதல் இருக்கலாம் என சந்தேகம் எழுவது இயல்புதான்.
ஏனெனில் இந்தியாவில் காப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், அதை ஈடுகட்ட நமது அண்டை நாடு ஒன்றிடம் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு ஏற்பட்டது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான பின்னணியில் அந்த நாடும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் இருந்திருக்கும் வாய்ப்பும் உண்டு.
கனிமொழியும், வைகோவும் கேட்பதுபோல ஸ்டெர்லைட் போராட்டதிற்கு வெளிநாட்டு நிதி வந்ததற்கான ஆதாரங்களை ஆளுநர் ரவி பொதுவெளியில் வெளியிட வாய்ப்பே இல்லை. அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம், தான் திரட்டிய ஆதாரங்களை அனுப்பி வைத்து, வெளிநாட்டு நிதியை வாங்கிக் கொண்டு போராட்டத்தை தூண்டிவிட்டவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிகளைதான் மேற்கொள்வார். முதலில் சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துகள் முடக்கப்படலாம். அதுவரை யார் யாரெல்லாம் வெளிநாட்டு பணத்தை வாங்கினார்களோ அவர்களின் பெயர்கள் வெளியே வராது.
ஆளுநர் பொதுவெளியில் வைக்கும் கருத்துகளுக்கு தார்மீக ரீதியாக அதை விமர்சிக்கும் உரிமை ஆளும் கட்சிக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் என்றுமே உண்டு. அதன்படி பார்த்தால் சட்டப்பேரவை தீர்மானங்கள் குறித்தும், ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு கிடைத்த வெளிநாட்டு நிதி பற்றி திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவைதான்.
இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி ஆளுநர் ரவி வேதனை தெரிவித்து பேசியதை காலம் காலமாக சமூக நீதி குறித்து பேசும் தமிழக கட்சிகள் எல்லாமே அதை கண்டு கொள்ளாமல் வாய் மூடி மௌனமாகி விட்டதுதான்” என்று அந்த அரசியல் சட்ட வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.