1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருடுபோன கலசங்கள் மீட்பு: வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!
Author: Rajesh5 March 2022, 12:15 pm
கடலூர்: விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் களவுபோன கலசங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்து 28 நாட்கள் ஆன நிலையில் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்களை மார்ச் மாதம் 1ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.
இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் காவல் துணை கண்காணிப்பாளர் அங்கித்ஜெயின், உதவி ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவினர் கோவில் வளாகத்தில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் விருத்தாச்சலம் நகரப் பகுதியிகளில் உள்ள தெருக்களில் இருந்த சிசிடிவிக்களை கொண்டு தீவிரமாக தேடி வந்தது.
மேலும், அண்மையில் கோவிலுக்கு அடிக்கடி வந்த பக்தர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் விருத்தாம்பிகை சன்னதியில் இருந்து திருடப்பட்ட மூன்று கலசங்களை பறிமுதல் செய்த போலீசார், விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகர், அமுதம் தெருவில் பரமசிவம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் இருந்து கலசங்கள் திருடுபோனதால் பக்தர்கள் கவலையடைந்த நிலையில், தற்போது கலசங்கள் மீட்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0
0