கரைக்கு அருகே நிலை கொண்ட மாண்டஸ் புயல்.. பலத்த காற்றுடன் கனமழை : எங்கெல்லாம் மின்சாரம் நிறுத்தம்? விபரம்!!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2022, 9:14 pm
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஏற்கனவே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இந்தப் புயல் இப்போது சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 110 கிமீ தூரத்தில் உள்ளது.
இன்று இரவு 11.30 மணிக்கு மேல் இந்தப் புயல் கரையை கடக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் நெருங்கும் நிலையில், கரையை ஒட்டியுள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆபத்தான இடங்களில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், கனமழை காரணமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் எந்தவொரு வாகனங்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
ஒவ்வொரு வாகனமாகச் சோதனை செய்யும் போலீசார், அப்பகுதியில் வீடுகள் உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். புதுவையில் இருந்து சென்னை வரும் வாகனங்களை அனுமதிக்கவில்லை.
அதேபோல ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போலச் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைசாலை வழியாகப் புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே புயல் கரையைக் கடக்கும் போது எங்கெல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த முக்கிய தகவல்களைத் தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த மாண்டஸ் புயல் இன்றிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று ராஜேஷ் லக்கானி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அனைத்து இடங்களிலும் மின்தடை இருக்காது என்று தெரிவித்த அவர், தேவையான பகுதிகளில் மட்டும் மின்தடை இருக்கும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், புயல் காரணமாக எதாவது பகுதிகளில் மரம் விழுந்து மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டால், அதைச் சரி செய்ய மின் கம்பங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் தேவைக்கு ஏற்ப தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
மாண்டஸ் புயல் காரணமாக மின் இணைப்பில் பாதிப்பு எதாவது ஏற்பட்டால் அதைச் சரி செய்யச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் துறை ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.