விளையாட்டு போட்டிக்காக வெயிலில் 4 மணிநேரம் காத்திருந்த மாணவன் பலி ; மாணவர்கள் என்றால் அத்தனை மலிவாகிவிட்டதா..? அண்ணாமலை கேள்வி!!

Author: Babu Lakshmanan
25 August 2023, 7:58 pm

சென்னை ; விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வந்த பள்ளி மாணவன் வெயிலில் 4 மணிநேரம் காக்க வைக்கப்பட்டதால், திடீரென உயரிழந்த சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில், விளையாட்டுப் போட்டிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களை, நான்கு மணி நேரம், மைதானத்தில் வெயிலில் நிறுத்தி வைத்துள்ளனர். வெயில் தாங்க முடியாமல், 12ஆம் வகுப்பு படிக்கும் ரிஷி பாலன் என்ற மாணவர், மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். போட்டிகளைத் துவக்கி வைக்க வேண்டிய மாவட்டக் கல்வி அலுவலர், மயிலாடுதுறை பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதை ஒட்டி காலதாமதமாக வந்ததால், ஒரு மாணவர் உயிர் பறி போயிருக்கிறது.

மயங்கி விழுந்த மாணவருக்கு, முதலுதவி சிகிச்சையளிக்காமல் காலதாமதம் செய்ததாகத் தெரியவருகிறது. மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பொறுப்பின்மையால், கூலி வேலை செய்யும் ஏழைப் பெற்றோர்களின் ஒரே நம்பிக்கை சிதைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் வேறொரு பகுதி நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பதற்காக, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்த பள்ளி மாணவர்களை நான்கு மணி நேரம் வெயிலில் நிறுத்தி வைப்பது என்ன விதமான மனநிலை? ஏழை எளிய மாணவர்கள் என்றால் அத்தனை மலிவாகிவிட்டதா தமிழக அரசுக்கு?

இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பொறுப்பான தமிழக அரசு, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்த அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு, தமிழக அரசு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!