ஒரே நாளில் அடுத்தடுத்து U TURN : எதிர்ப்பால் திணறும் CM ஸ்டாலின்?….
Author: Udayachandran RadhaKrishnan25 April 2023, 9:30 pm
தாங்கள் சொல்வதை மட்டும்தான் கேட்டு நடக்கவேண்டும் என்று திமுக தலைமை நினைப்பது தவறு என்பதை அதன் கூட்டணி கட்சிகள் சமீபகாலமாக பொதுவெளியில் வெளிப்படுத்தி வருவது திமுக அரசுக்கு மட்டும் அல்ல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பெரும் தலைவலியாக அமைந்து விடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
நிலை குலைந்து போன திமுக
அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்து அறிவித்த பல திட்டங்களில் இருந்து பின் வாங்குவதும் திமுக அரசின் வாடிக்கையாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மாநிலத்தில் அதிரடி அரசியல் நடத்தி வரும் பாஜக மற்றும் சில அரசியல் கட்சிகளை விட கூட்டணி கட்சிகளிடம் இருந்து முதலில் கடும் எதிர்ப்பு கிளம்பும்போதுதான் திமுக நிலை குலைந்து போகிறது.
திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகியவை கண்களை மூடிக்கொண்டு ஆதரவு குரல் கொடுத்தாலும் கூட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பால் திமுக தலைமை வேறு வழியின்றி பணிந்து போகக் கூடிய நிலை உருவாகி இருப்பதும் உண்மை.
12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம்
கடந்த 21ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தொழிற்சாலைகளிலும் மின்னணு மற்றும் மென்பொருள் துறைகளிலும் 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவை கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி திமுக அரசு நிறைவேற்றியது.
இந்த மசோதாவின் அடிப்படையில் நான்கு நாட்களுக்கு 48 மணி நேரம் வேலை, மூன்று நாட்களுக்கு விடுமுறை, சம்பளம் வழங்குவதில் எந்த மாறுதலும் கிடையாது ஐந்தாவது நாள் வேலை பார்த்தால் அதற்காக கூடுதல் சம்பளம் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில்
அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகின்றன. எனவே தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கணேசன் ஆகியோர் விளக்கமும் அளித்தனர்.
ஆளுங்கட்சி தொழிற்சங்கமே எதிர்ப்பு
என்றபோதிலும் தொழிற்சங்கத் தலைவர்களிடம் எழுந்த கோபம் அடங்கவில்லை. இதைத்தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ வ வேலு, சி வி.கணேசன், தா.மோ.அன்பரசன் மூவரும் ஆலோசனை நடத்தினர்.
இதில் சிஐடியு, ஏஐடியூசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. பேச்சுவார்த்தையின்போது, மசோதாவில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களுக்கு திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையும் அதிருப்தி தெரிவித்தது.
நாங்களும் மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மறைமுக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதுவரை வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காத தொ மு ச பிரதிநிதிகள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்ததால் அமைச்சர்கள் அதிர்ந்துதான் போனார்கள்.
மசோதாவை நிறுத்திய முதல்வர்!!
ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமே அரசுக்கு எதிராக போராட்டமா?… என்ற கேள்வி திமுக தலைமைக்கு பெரும் தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தியது. இதனால்தான் வேறு வழியின்றி 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட நேர்ந்தது.
இந்த நிலையில்தான் தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணை ஒன்று தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மண்டபங்கள், மைதானங்களில் மது விருந்து
தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கப்படுவதாகவும், அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு அதிமுக, பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள். மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ளது, இந்த திராவக மாடல் அரசு”என்று சாடினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செம விடியல் என்று கிண்டலடித்தார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ, ஒரு படி மேலே சென்று “இதற்கு மதுபானங்களை அரசு டோர் டெலிவரியே செய்யலாம்” என நக்கலாக கண்டனம் தெரிவித்தார்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் “தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூகப் பண்பாட்டு சீரழிவுக்கு வழி வகுக்கும்” என்று வேதனையோடு கண்டித்தார்.
“தீயப் பழக்கமாக இருந்த மதுவை திராவிடப் பண்பாடாகவே திமுக அரசு மாற்றியுள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடினார்.
மறுப்பு தெரிவித்த அமைச்சர்
திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மதுபான துறையை தன் வசம் வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக உள்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையை முழுமையாக படித்தது போல் தெரியவில்லை. திருமண மண்டபங்களில் மது விருந்து நடத்த அனுமதி என்றெல்லாம் அதில் சொல்லப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் அவர் மறுத்தார்.
உடனடியாக நீக்கிய அரசு
ஆனால் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த திமுக அரசு உள்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில்திருமண மண்டபங்களில் மது அருந்த அளித்திருந்த அனுமதியை மட்டும் உடனடியாக நீக்கியது.
இப்படி அடுத்தடுத்து ஒரே நாளில் இரண்டு முறை திமுக அரசு ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது. எனினும் கூட்டணி கட்சிகளிடம் திமுக அரசு கண்டனத்தை வாங்கி கட்டிக் கொள்வது முதல் முறை அல்ல. கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி தமிழக மின்வாரியம் நுகர்வோருக்கு அனுப்பிய ஒரு நோட்டீஸ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மின்வாரியம் நோட்டீஸ்
அதில் ‘ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்புகள் இருந்தால், அவை அனைத்தையும் ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றவில்லையெனில், மின் இணைப்புகள் 1-D இணைப்பாக ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் கட்டணம் என்ற பிரிவுக்கு மாற்றப்படும். இதன் நோக்கம் என்னவெனில் 100 யூனிட் மானியம் என்பது முறையாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்’ என்று
கூறப்பட்டிருந்தது. இதை உடனடியாக அதிமுக, பாஜக, பாமக,நாம் தமிழர் கட்சி ஆகியவை வன்மையாக கண்டித்தன. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
“மின்வாரியத்தின் நோட்டீஸ், மின்நுகர்வோருக்கு மின்சாரம் தாக்கியது போல் உள்ளது.
மின் இணைப்புகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வற்புறுத்தியபோது பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இவ்வாறு இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் பறிக்கப்படாது எனவும், இதனால் மின்நுகர்வோருக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மின்சாரத் துறை அமைச்சர் அறிவிப்பும் செய்தார். ஆனால் இப்போது அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.இதை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால்
மாநில அளவில் தீவிர போராட்டம் நடத்துவோம்” என்று அவர் எச்சரிக்கையும் விடுத்தார்.
U TURN அடித்த அமைச்சர்
ஆனாலும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக அரசிடம் அப்படி ஒரு திட்டமே இல்லை. மின் நுகர்வோருக்கு தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய அதிகாரி மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அப்படியே யூ டேர்ன் அடித்தார்.
மின் வாரியத்திடம் அப்படியொரு திட்டமே இல்லாத நிலையில் ஒரு அதிகாரியால் தன்னிச்சையாக ஒரு எச்சரிக்கை நோட்டீசை தயாரிக்க முடியுமா? என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. அந்த கேள்விக்கு திமுக அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
“இப்படி பெரிய அளவில் மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு திமுக அரசு முதலில் அனுமதி வழங்கிவிட்டு தனது கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு கிளப்பியவுடன் ஜகா வாங்குவதும் தொடர்கதை ஆகிவிட்டது. இதுபோன்ற திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப திமுக அரசு நடந்து கொண்டிருந்தால் பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை. அல்லது குறைந்த பட்சம் கூட்டணி கட்சிகளிடமாவது ஆலோசனை பெறலாம்.
இதில் நாம் ஆளும் கட்சியாக இருக்கிறோம். நாம் எடுக்கும் முடிவை அப்படியே கூட்டணி கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று திமுக தலைமை கருதக்கூடாது. ஏனென்றால் மக்களை பாதிக்கும் விவகாரம் என்றால் அது தேர்தல்களிலும் எதிரொலிக்கும், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று கூட்டணி கட்சிகள் கருதலாம். அதனால் அவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து கேட்பதில் எந்த தவறும் கிடையாது. இதில் அவர் ஈகோ பார்க்கவும் தேவையில்லை” என்று அரசியல் நோக்கர்கள் வலியுறுத்துகின்றனர்.
புஸ்வானமான ஸ்டாலின் பேச்சு!!
“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிக முக்கியம்.அதை ஒரு அரசு செய்துதான் ஆக வேண்டும். ஆனால் அதிலும் எதை முதலில் செய்ய வேண்டும் எதை மெதுவாக நிறைவேற்றவேண்டும் என்ற கணக்குகளும் உண்டு.
மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முக்கிய சலுகைகளைவிட,பெரிதும் பாதிக்கும், அதுவும் உயிருக்கு உலை வைக்கக்கூடிய விஷயங்கள் மீது கொடுத்த வாக்குறுதிகளைத்தான் ஒரு அரசு முதலில் நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஸ்டாலின் பேசிய பேச்சுகள் புரட்சிகரமாக இருந்தன. ஆனால், அந்த புரட்சி ஆட்சிக்கு வந்தபிறகு புஸ்வாணமாகிவிட்டது” என்றும் அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
0
0