எம்பி சீட்டுக்கு வரிந்து கட்டும் வாரிசுகள்!… திணறும் திமுக, காங்., அதிமுக!
Author: Udayachandran RadhaKrishnan22 January 2024, 9:25 pm
எம்பி சீட்டுக்கு வரிந்து கட்டும் வாரிசுகள்!… திணறும் திமுக, காங்., அதிமுக!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பலத்த மும்முனைப் போட்டி இருக்கும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் முன்பு எப்போதையும் விட பிரதான கட்சிகளின் வாரிசுகளும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் போட்டியிடுவதற்காக வரிந்து கட்டுவதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவில் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் 14 பேர் அறிவாலயத்திடம் தங்களுக்கு எம்பி சீட் கேட்டு விண்ணப்ப மனு கொடுத்துள்ளனர். இதற்கடுத்தாற் போல் அதிமுகவில் 8 பேரும், காங்கிரஸ் கட்சியில் ஐந்து பேரும் களம் காண விரும்புவது தெரிய வந்துள்ளது. தேமுதிக, மதிமுக, புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, ஓபிஎஸ் அணி தரப்பிலும் வாரிசுகள் இந்த முறை எப்படியும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து விட வேண்டும் என்று துடியாய் துடிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
திமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் அமைச்சர் உதயநிதி இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருப்பதால் அவருடைய அணிக்கு மட்டும் குறைந்தபட்சம் 12 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசுகள் என்ற கணக்கின்படி பார்த்தால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழி தூத்துக்குடியிலும், அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் அல்லது கிருஷ்ணகிரியிலும், முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் மத்திய சென்னையிலும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் என் வி என் சோமுவின் மகளான டாக்டர் கனிமொழி தென் சென்னையிலும், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வடசென்னையிலும், மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் தற்போதைய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அக்காளுமான தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னையிலும் போட்டியிடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இதேபோல் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் கடலூரிலும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சியிலும், மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கானின் மகன் சுபேர்கான் வடசென்னையிலும், அமைச்சர் எ வ வேலுவின் மகன் டாக்டர் கம்பன் திருவண்ணாமலை அல்லது கள்ளக்குறிச்சியிலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஆர். பிரபு சேலம் தொகுதியிலும் அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் பெரம்பலூர் அல்லது திருச்சியிலும், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவின் மகன் நெல்லைத் தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அறிவாலயத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இவர்கள் தவிர, முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமியின் மகள் பவானி ராஜேந்திரன் ராமநாதபுரத்திலும், சிவகங்கை மாவட்ட திமுக இளைஞர் அணியின் அமைப்பாளரான மறைந்த ரூசோவின் மனைவி ஜோன்ஸ் சிவகங்கையிலும் எம்பி சீட் கேட்டு திமுக தலைமையிடம் மனு அளித்துள்ளனர்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தென் சென்னை, வடசென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள்
சீட் கேட்பதுதான்.
இதற்கு அடுத்ததாக அதிமுகவில் முன்னணி தலைவர்களான ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் தென் சென்னையிலும், கேபி முனுசாமியின் மகன் சதீஷ்குமார், கிருஷ்ணகிரியிலும், அன்பழகனின் மகன் சந்திரமோகன் தர்மபுரியிலும், நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணன் திண்டுக்கல்லிலும், ராஜன் செல்லப்பா எம்எல்ஏவின் மகன் ராஜ் சத்யன் மதுரை அல்லது விருதுநகரிலும், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமியின் மகள் கிருத்திகா ராமநாதபுரத்திலும், முன்னாள் எம்பி முருகேசனின் மகள் வசந்தி முருகேசன் தென்காசியிலும், கோவை நகர அதிமுக நிர்வாகி. சந்திரசேகரின் மனைவி டாக்டர் ஷர்மிளா கோவை தொகுதியிலும் போட்டியிடுவதற்கு அதிமுக தலைமையிடம் விண்ணப்பித்து இருப்பது தெரிய வருகிறது.
காங்கிரஸ் கட்சியிலும் வாரிசுகளுக்கு பஞ்சமில்லை. முன்னாள் மத்திய நிதி அமைச்சர்
ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையிலும், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் ஆரணியிலும், ஈவி கே எஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் தேனி அல்லது ஈரோட்டிலும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் கிருஷ்ணகிரியிலும், மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் கன்னியாகுமரியிலும் களம் காண தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையிலான தேர்தல் பணிக் குழுவிடம் விண்ணப்ப மனு கொடுத்துள்ளனர்.
அதேபோல 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில்
வெற்றி பெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், இந்த முறை பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். அவர் தனது மூத்த மகன் ரவி பச்சமுத்துவை பெரம்பலூரில் களம் இறக்குவார் என்கிறார்கள்.
ஓ பன்னீர்செல்வம் தனது இரு மகன்களில் ரவீந்திரநாத்துக்கு தேனியையும், ஜெய தீப்பிற்கு சிவகங்கையையும் ஒதுக்கி தரும்படி தமிழக பாஜகவிடம் வேண்டுகோள் விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேமுதிகவின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் மனைவியும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா யாருடன் கூட்டணி அமைத்தாலும் கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு வாங்கி போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவோ தனது மகன் துரை வைகோவுக்கு விருதுநகர் அல்லது திருச்சி தொகுதியை தாருங்கள் என்று திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இம் முறை நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்கிறார்கள். தனது மகன் ஷியாமை தென்காசியில் களமிறக்க அவர் விரும்புவதும் தெரிகிறது. அதிமுக அணியில் இணைவதா? அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைப்பதா? என்பதை இதுவரை அவர் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தென்காசி தொகுதியை தனது மகனுக்காக டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டு வாங்கி விடுவார் என்பது உறுதியாக தெரிகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய விவரம் முழுமையாக இன்னும் வெளிவராததால் அந்த மூன்று கட்சிகளிலும் யாரேனும் வாரிசுகள் போட்டியிடுகிறார்களா என்பது இதுவரை தெரியவில்லை. என்ற போதிலும் தமிழக பாஜகவிலும், டிடிவி தினகரன் மற்றும் சீமான் கட்சியிலும் வாரிசுகளோ அல்லது ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவு முறை கொண்டவர்களோ தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கும்.
திமுக கூட்டணியில் திமுக மட்டுமின்றி காங்கிரஸ், மதிமுக கட்சிகளில் 20 வாரிசுகள் வரை களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிமுக சார்பில் நிறுத்தப்படும் எட்டு வாரிசுகளுக்கும் இவர்களுக்கும் இடையே மிக கடுமையான
போட்டி இருக்கும் என்பது நிச்சயம். அதேநேரம் வடசென்னை, தென் சென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் திமுகவில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட விரும்புவதால் தற்போது அந்தத் தொகுதிகளில் எம்பிக்களாக உள்ளவர்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமிக்கு டெல்லி ராஜ்யசபா எம்பி கொடுக்கப்பட்டு அங்கு ரகுமான்கானின் மகன் சுபேர்கானுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம். அதேபோல அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பதிலாக அந்த தொகுதியில் வேறொருவர் நிறுத்தப்படலாம்.
இது போன்ற நிலைதான் சொத்துக்கு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்பியுமான கௌதம சிகாமணிக்கும் உள்ளது.
அமைச்சர் எ வ வேலுவின் மகன் டாக்டர் கம்பனுக்கு கள்ளக்குறிச்சி ஒதுக்கப்பட்டால் கௌதம சிகாமணியின் பாடு திண்டாட்டம் தான்!
அதேநேரம் சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ்க்கு நெல்லையை திமுக தலைவர் ஸ்டாலின் ஒதுக்கினால் தற்போதைய எம்பி ஞான திரவியத்துக்கு சீட் கிடைக்காமல் போய்விடும். சிவகங்கை தொகுதியை ஜோன்ஸ் ரூசோவுக்கு திமுக ஒதுக்கினால், கார்த்தி சிதம்பரம் வேறு தொகுதியை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அமைச்சர் கே என் நேருவின் மகனுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் திருநாவுக்கரசரும் இன்னொரு தொகுதியை கேட்டுப் பெற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும்.
பிரதான கட்சிகளின் பெரும்பாலான வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துவிடும் என்பதால் எதிர்வரும் தேர்தலில் பரபரப்புக்கு எந்த பஞ்சமும் இருக்காது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!