துணிவு, வாரிசு படங்களின் காட்சிகள் திடீர் ரத்து : தமிழக அரசு உத்தரவு… ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2023, 1:29 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர். இவர்கள் இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (11.01.2023) வெளியாக உள்ளது.
அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி மக்கள் மத்தியில் விறுவிறுப்பை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரிலீஸ் நாளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிந்துள்ளார்.
துணிவு திரைப்படத்தை போலவே, விஜய்யின் திரைப்படமான “வாரிசு” கூட 11.01.2023 அன்று வெளியாக உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஜெயசுதா, பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அஜித் மற்றும் விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், இருவரின் ரசிகர்களும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே போல, ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறு போட்டியும் கூட உருவாகி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் நாளை படங்களை வெளியாவதை முன்னிட்டு விஜய், அஜித் ரசிகர்கள் கோலாகலத்துடன் வரவேற்க காத்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவு போட்டுள்ளது. அதில் ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை அதிகாலை சிறப்பு காட்சிகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் கட்அவுட்டுகளுக்கு பால் ஊற்றி கொண்டாட அனுமதியில்லை என்றும் உத்தரவு அளித்துள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்களுக்கு அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி அதிகாலை சிறப்பு காட்சிகளை ரத்து செய்துள்ளது.
ஏற்கனவே 11ஆம் தேதி படம் வெளியாக உள்ளதால், 11 மற்றும் 12ஆம் தேதிகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களுக்கு இந்த சுற்றறிக்கையை தமிழக அரசு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.