சித்தராமையா பிரதமர் ஆவதற்கு ஆதரவு! ராகுலுக்கு எதிராக திருமா போர்க்கொடி?…
Author: Udayachandran RadhaKrishnan31 July 2022, 7:58 pm
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிர்ச்சி தரும் விதமாக, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசுவது வழக்கம்.
திருமா சாய்ஸ் நிராகரிப்பு
இரண்டு மாதங்களுக்கு முன்பு, குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார்?…என்பது பற்றி காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டபோது, குடியரசுத் தலைவர் தேர்தலில் இதுவரை யாரும் கிறிஸ்தவர்கள் போட்டியிட்டது இல்லை, எனவே பொதுவேட்பாளராக ஒரு கிறிஸ்தவரைத்தான் நிறுத்தவேண்டும் என்று திருமாவளவன் திடீரென்று வலியுறுத்தினார்.
ஆனால் 2012-ம் ஆண்டில் பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகள் கிறிஸ்தவரான சங்கமாவை நிறுத்தியபோது எம்பி ஆக இருந்த திருமாவளவன் ஏன் அவரை ஆதரிக்கவில்லை? என்று பாஜக தலைவர்கள் அவரிடம் கிடுக்குப்பிடி கேள்வியை எழுப்பினர்.
உளறிய திருமா
இது தெரியாமல், கிறிஸ்தவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று உளறிக் கொட்டி விட்டோமே, என்று திருமாவளவன் நினைத்தாரோ, என்னவோ அதன் பிறகு அதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. அப்படியே விட்டுவிட்டார்.
இதன் பின்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் கே ஆர் நாராயணன் தனது பர்மா மனைவி உஷாவின் விருப்பத்திற்காக வாழ்நாளின் இறுதி நாட்களில் கிறிஸ்தவராக வாழ்ந்தவர் என்ற தகவலும் வெளியானது.
அதனால் எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் பற்றி ஆலோசிக்கும்போது கிறிஸ்தவர் என்ற பேச்சையே திருமாவளவன் எடுப்பதில்லை.
மேலும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், கிறிஸ்தவருமான மார்கரெட் ஆல்வா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதையும் அவ்வளவாக திருமா கண்டு கொண்டதாக தெரியவில்லை.
திருமா போட்ட குண்டு
இந்த நிலையில்தான் சென்னையில் நடந்த விசிகவின் விருது வழங்கும் விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி முன்னிலையில், திருமாவளவன் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு கருத்தை தெரிவித்தார். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் அம்பேத்கர் விருதை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்கிப் பேசிய திருமாவளவன் அவரை வானளாவப் புகழ்ந்தார்.
நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, “விருதாளரான சித்தராமையா ஏன் பிரதமராகக் கூடாது? அவருக்கு ஒரு தொலைநோக்கு பார்வை உள்ளது. இதை நான் சர்ச்சைக்காக கூறவில்லை. அவர் வலிமைமிக்க ஒரு தலைவர். இப்படிப்பட்ட பார்வை உள்ளவர்கள்தான் அதிகாரத்தில் அமரவேண்டும்.
விசிக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கும் எதிரானவர்கள் பாஜகவினர். அவர்கள் மறுபடியும் ஆட்சிக்கு வருவது ஆபத்தானது. பாஜகவின் உண்மையான எதிரி அரசியலமைப்பு சட்டம்தான். பாஜக எண்ணம் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம், சட்டத்தில் கூறப்பட்டு இருப்பவைதான். கருத்தியலுக்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. எனவேதான் சித்தராமையா போன்ற தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். யாரும் செய்யாத சாதனையைப் படைத்து இந்த விருதை அவர் பெற்றிருக்கிறார்.
தர்மசங்கடத்தில் காங்., மூத்த தலைவர்கள்
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் திருமா என விமர்சித்தாலும், காங்கிரசுடன் இணைந்து தீயசக்திகளை அழிக்கவேண்டும். பாஜகவை காங்கிரஸ் இல்லாமல் ஏதும் செய்யமுடியாது. தேசிய அளவில் காங்கிரசுடன் இணைந்துதான் பாஜகவை அழிக்க முடியும்” என்று ஆவேசப்பட்டார்.
சித்தராமையா பிரதமராக வேண்டும் என்று, திருமாவளவன் குறிப்பிட்டு பேசியபோது அரங்கத்தில் இருந்த விசிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது மேடையில் இருந்த கே எஸ் அழகிரி, சித்தராமையா இருவருமே தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில், பாஜகவை திருமாவளவன் கடுமையாக விமர்சித்தது எல்லாமே மறக்கப்பட்டு தற்போது, சித்தராமையாவை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவிக்க வேண்டும் என்ற ரீதியில் அவர் பேசியதுதான் தேசிய அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் குரல்?
திரிணாமுல் காங்கிரஸ், திமுக, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, விசிக போன்றவை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவை எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மனதுடன் சோனியாவிடம் வலியுறுத்தலாம். அதற்கான ஒரு முன்னோட்டமாகவே திருமாவின் இந்த கருத்து அமைந்துள்ளது என்று டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைத்தான், பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தவேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் முதன்முதலாக ஆதரவு குரல் கொடுத்தார். அவருடைய கோரிக்கையும் ஏற்கப்பட்டது.
ஆனாலும் காங்கிரசால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. உத்தர பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தியால் வயநாட்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரே ஒரு தொகுதியில் தோல்வி கண்டதால் முதலில் அதிர்ச்சிக்கு உள்ளானது, திமுகதான்.
திமுகவின் வாய்ஸ்-ஆ திருமா?
கடந்தாண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதலே திராவிட மாடல் ஆட்சியை பற்றி நாடு முழுவதும் பெருமையோடு பேச வைப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அதை திமுகவின் கூட்டணி கட்சிகள் இதுவரை ஆதரித்தே வருகின்றன. இதனால் மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் போன்ற முதலமைச்சர்களுக்கு உள்ள பிரதமர் பதவி மீதான ஆசை ஸ்டாலினுக்கும் வந்துவிட்டதோ என்று கருதத் தோன்றுகிறது.
ஒருவேளை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்கிற எண்ணம் தங்களுக்கு சாதகமாக அமையாத பட்சத்தில், ராகுல்காந்திக்கு பதிலாக தென் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் அனுபவ மிக்கவரான சித்தராமையாவுக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம் என்பதுகூட திமுக கூட்டணி கட்சிகளின் கணக்காக கூட இருக்கலாம்.
ஏனென்றால் இதை நான் சர்ச்சையாக பேசவில்லை என்று திருமாவளவன் உறுதிபடக் கூறுகிறார். பிரதமர் பதவியில் சித்தராமையாவை அமர வைக்க வேண்டுமென்றும் சொல்கிறார். இதன் அர்த்தம் நான் தெரிந்தேதான் இதை பேசுகிறேன் என்பதுபோல உள்ளது.
ஏனென்றால் இம்முறையும் ராகுலுக்கு பிரதமர் வேட்பாளர் வாய்ப்பை அளித்து காங்கிரஸ் மீண்டும் தோற்க நேர்ந்தால் அது தேசிய அரசியலில் தங்களுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விடும் என்று திமுக தலைமை நினைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் திருமாவளவனை திமுகவே கூட இப்படி பேச வைத்திருக்கலாம்.
சந்தேகம் கிளப்பும் அரசியல் விமர்சகர்கள்
எது எப்படியோ சித்தராமையா பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று திருமாவளவன் பேசியிருப்பது, காங்கிரஸ் தலைமையை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது, என்பதே உண்மை.
அதேநேரம் தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சனை இருப்பதால் சித்தராமையாவின் பெயரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை, திருமாவளவன் எப்படி வைத்தார் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் சந்தேகமும் எழுப்புகின்றனர்.