‘உயர்நீதிமன்ற உத்தரவை பாருங்க’.. செந்தில் பாலாஜி வழக்கில் குறுக்கே திரும்பிய அமலாக்கத்துறை…!

Author: Babu Lakshmanan
15 May 2024, 11:46 am
senthil-balaji-updatenews360
Quick Share

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்டத்தால் 6 மாதங்களில் 8 உயிர்கள் பலி… இனியும் தமிழக அரசு தூங்கக்கூடாது ; ராமதாஸ் வலியுறுத்தல்!!

அதில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்.எல்.ஏ. பொறுப்பில் உள்ளதால் வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது. விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தது.

Views: - 132

0

0