சனாதன தர்மம் குறித்த பேச்சு… பின்விளைவுகளை தெரிந்து இப்படி பேசலாமா..? அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு…!!
Author: Babu Lakshmanan4 March 2024, 2:56 pm
அமைச்சராக இருக்கும் நீங்கள் ஒன்றை பற்றி பேசுவதற்கு முன்பு, அதன் விளைவுகளை அறிந்து பேச வேண்டும் என்று அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, பேசிய அவர், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள் என்றும், சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது என்றும் கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் உள்பட வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், பல்வேறு மாநிலங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.
இதனையடுத்து, தன் மீது பல்வேறு மாநிலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஒன்று சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்ல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள் என நீதிபதி தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பு, சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கவில்லை என்றும், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி, நீங்கள் ஒரு சாமானியர் அல்ல. அமைச்சர் பதவி வகிப்பவர்; அமைச்சராக இருந்து கொண்டு பேசும் போது எதிர்விளைவுகளையும் உணர்ந்து பேச வேண்டும் எனக் கூறி, வழக்கின் விசாரணை மார்ச் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.