எடப்பாடி பழனிசாமி வசம் வந்தது இரட்டை இலை… கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செல்லும் ; ஒற்றை தலைமையில் அதிமுக.. தொண்டர்கள் கொண்டாட்டம்!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 10:49 am

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் அதிரடி உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பும் எழுத்தப்பூர்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராகவும், தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை அளித்துள்ளது.

அதாவது, கடந்த ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இதன்மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியானது. மேலும், ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம் உள்பட நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றதால், அதிமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Lenin Bharathi about Bala's Vanangaan movie ’ஆணாதிக்க ஆழ்மன வக்கிரம்’.. பாலாவை கடுமையாக சாடிய பிரபல இயக்குநர்!