சமரசத்திற்கு தயாரா…? விட்டுக் கொடுக்காத இபிஎஸ் – ஓபிஎஸ்… 3 வாரம் கெடு விதித்த உச்சநீதிமன்றம்..!!

Author: Babu Lakshmanan
29 July 2022, 2:35 pm

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் திட்டவட்டமான முடிவை தெரிவித்து விட்டனர்.

கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, திமுகவுடன் உறவாடியதாக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது :- கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. அதனால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்,” என கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வரக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், அ.தி.மு.க கட்சியின் அடிப்படை விதிகள் மொத்தமும் மீறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிவில் சூட் வழக்குகள் முறையாக பரிசீலனை செய்யப்படவில்லை, என கூறினார்.

அப்போது நீதிபதிகள் மீண்டும் இரு தரப்பும் இணை வாய்ப்பு உள்ளதா ? என கேள்வி எழுப்பினர். இதற்கு, சாத்தியமில்லை என்று இரு தரப்பினரும் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனைதொடர்ந்து, நீதிபதிகள், இரு தரப்பும் இணையும் விவகாரம் தொடர்பானவற்றை விட்டு விடுவோம் என கூறிவிட்டு, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் என்ன விதி மீறல் நடந்துள்ளது ? எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன ? என கேள்வி எழுப்பினர்.

அந்த சமயம், ஓபிஎஸ் தரப்பில், பொதுக்குழுவே சட்டவிரோதம், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. முக்கிய அத்தனை முடிவுகளும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது, தன்னை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளனர். எனவே அந்த பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும், என தெரிவித்தனர்.

அப்போது ஈ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது, எனவே இந்த விவகாரத்தில் எந்த விதிகளும் மீறப்படவில்லை, என கூறினார்.

இதனைதொடர்ந்து, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற status quo உத்தரவை பிறப்பிக்கலாம் என தெரிவித்ததோடு, வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாமே என தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தை உயர்நீதிமனறம் 3 வாரத்தில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 673

    0

    0