அந்த ஒருத்தர் கன்ஃபார்ம்.. ஹிண்ட் கொடுத்த ரெய்னா.. உற்சாகத்தில் தோனி படை!

Author: Hariharasudhan
1 November 2024, 7:45 pm

ரிஷப் பண்ட்டை தோனியுடன் டெல்லியில் பார்த்ததாக சுரேஷ் ரெய்னா கூறியது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லி: வருகிற 2025 மார்ச் மாதத்தில் 18வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும், தங்களது அணியில் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன.

இதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2025 ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறார். தோனி 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டு உள்ளார். மேலும், ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பதிரானா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி) ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி) என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தால் தக்க வைக்கப்பட்டனர்.

அதேநேரம், இந்த தக்க வைக்கும் பட்டியலில் மிகப்பெரிய அதிர்ச்சியும் காத்திருந்தது. அது என்னவென்றால், 3 முக்கிய அணிகளின் கேப்டன்கள் அந்தந்த அணி நிர்வாகத்தால் தக்க வைக்கப்படவில்லை. அவர்கள், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து நடப்பு சாம்பியனாக தரம் உயர்த்திய ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அந்தந்த அணி நிர்வாகத்தால் தக்க வைக்கப்படவில்லை.

இதனால், இந்த 3 வீரர்களை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளுக்கு இடையேயும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும், சின்ன தல என ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னா, சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்து உள்ளார். அந்தப் பேட்டியில், “நான் சமீபத்தில் டெல்லி சென்று இருந்தேன். அந்த நேரத்தில், அங்கு தோனியைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் ரிஷப் பண்டும் இருந்தார். என்னைப் பொறுத்தவரை, நிச்சயமாக மஞ்சள் ஜெர்சியுடன் விரைவில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடப்போகிறார்” எனத் தெரிவித்தார்.

இதன் மூலம், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ரிஷப் பண்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனி உடன் விளையாடுவார் என்பது உறுதி என மஞ்சள் படை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். அதேநேரம், சிஎஸ்கே தக்க வைத்துள்ள ஐந்து வீரர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் போக, அந்த அணியின் வீரர்களுக்கான ஊதிய கையிருப்பில் தற்போது 55 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது.

இதையும் படிங்க : மாவட்டச் செயலாளர்கள் அதிரடி நீக்கமா? அதிமுக முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி பதில்!

எனவே, இந்தத் தொகையை வைத்து சிஎஸ்கே அணி தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டும். ஒரு வேளை ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 15 கோடியாவது செலவிட வேண்டியது இருக்கும். அதேநேரம், மற்ற அணிகளும் ரிஷப் பண்ட்டை ஏலத்தில் வாங்க போட்டி போடும் என்றால், அந்த அணிகளுடன் சிஎஸ்கே அணியால் போட்டி போட்டு அவரை வாங்க முடியுமா என்பது கேள்விக்குறியாக ரசிகர்கள் முன்னால் நிற்கிறது.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!