‘நீங்க பொக்கிஷம் அண்ணா… ஆனா, அவர் இருக்கும் வரை பாஜக வளராது’ ; திடீரென பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா..!!
Author: Babu Lakshmanan6 December 2022, 2:16 pm
சென்னை ; பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா சிவா விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாஜகவில் சமீபத்தில் இணைந்த திருச்சி சூர்யா, ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், திமுக மற்றும் அமைச்சர்களின் செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.
இதனிடையே, இவருக்கும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறி ஆடியோ ஒன்று வெளியாகியது. அதில், திருச்சி சூர்யா சிவா ஆபாசமான வார்த்தைகளில் கடுமையாக பேசியிருந்தார்.
இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக திருச்சி சூர்யா சிவாவை, 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் ஒருவர் மீது பெரும் குற்றச்சாட்டை முன்வைத்து விட்டு, கட்சியில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி, என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து விலகியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.