மாலையில் சஸ்பெண்ட்… காலையில் கட்சியில் சேர்ப்பு : என்ன நடக்குது? தென்மாவட்ட பாஜகவில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan16 March 2023, 10:42 am
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த 5-ம் தேதி அதிமுகவில் இணைந்தார்.
அவர் இணைந்த அடுத்த நாளே மேலும் சில பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 7-ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் தீ வைத்து எரித்தனர்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி முறியுமோ? என்ற கேள்வியும் எழுந்தது.
இதனிடையே, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி மீது அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடியை 6 மாத காலம் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் நேற்று இரவு அறிவித்தார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியானது. நேற்று இரவு பாஜகவில் இருந்து இடைநீக்கப்பட்ட தினேஷ் ரோடி இன்று காலை மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாஜகவில் இருந்து தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து தற்காலிகமாக விடுவித்த அறிவிப்பு செல்லாது என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி இன்று அறிக்கை விட்டுள்ளார்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி நேற்று இரவு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இன்று காலை கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.