நான் சொல்லுவதை கேட்டால் பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும் தான் நல்லது : எஸ்வி சேகர் சொன்ன யோசனை..!!
Author: Babu Lakshmanan13 August 2022, 5:36 pm
கன்னியாகுமரி : ஊழலற்று செயல்பட்ட தன்னை பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, நான் சென்று என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்க முடியாது என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள அற்புத ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரரின் 351வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.வி. சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ராகவேந்திரரின் தேர்த்திருவிழாவில் பங்கேற்றார். பின்னர் ராகவேந்திரா குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசு 400 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும். அதே நேரத்தில் தமிழகத்தில் நெகட்டிவ் ஆக எதிர்த்து பேசி வரும் கட்சியினர் ஆச்சிரியத்தில் வாயடைத்து நிற்பார்கள்.
மேலும், கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு விஷயத்தில் கருத்து சுதந்திரம் அவரவருக்கும் உண்டு. ஒவ்வொருத்தருக்கும் தான். ஆனால் உங்கள் கருத்தை மட்டும் தான் சொல்ல முடியும். என் கருத்தை சொல்ல உரிமை இல்லை என்று சொன்னால் அது கருத்து சுதந்திரம் இல்லை. கருத்து திணிப்பு.
ஊழலற்று செயல்பட்ட தன்னை பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, நான் சென்று என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்க முடியாது. சிறப்பாக செயலாற்றும் அண்ணாமலை தன்னை பயன்படுத்திக்கொண்டால், மேலும் சிறப்பாக பணியாற்ற முடியும், என தெரிவித்தார்.