ரொம்ப பெரிய தப்பு பண்ணியாச்சு… விரைவில் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் ; நடிகர் எஸ்வி சேகர்..!!
Author: Babu Lakshmanan27 September 2023, 12:12 pm
சென்னை ; அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்றவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் அமர்த்தியது தான் தவறு என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின் நடிகர் எஸ்வி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மாநில பாஜகவுடன் இருந்த கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிவிட்டது. இதனால் மோடிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் ஹாட்ரிக் பிரதமராக வருவது உறுதி. ஏனென்றால் இந்த கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அவருக்கு பெரிய அளவில் உதவி செய்ய போவது இல்லை.
அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்றவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் அமர்த்தியது தான் தவறு. மத்திய பிரதேச தேர்தல்களில் அண்ணாமலை பார்வையாளராக மாற்றப்படுவார். விரைவில் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்படுவார். தமிழகத்தில் அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் போது, பாஜக ஜெயிக்கும் சீட்டுகள் பூஜ்யமாக தான் இருக்கும்.
அனைத்து ரசிகர் மன்றங்களைக் அழைத்து ஒரு கட்சிக்கு தேவையான அமைப்புகளை நடிகர் விஜய் கொண்டு வருகிறார். அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சொல்ல முடியாது. லியோ இசை வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதா அல்லது நிறுத்தினார்களா என்ற இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது, நிறுவனமே அவர்களே நிறுத்தியதாக தான் தெரிவித்து உள்ளனர், என்றார்.