டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் நடந்தது என்ன..? சரண்டரான தேர்தல் அதிகாரி… ஆக்ஷனில் இறங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…!!!
Author: Babu Lakshmanan7 March 2022, 5:03 pm
மதுரை டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியானது. இந்தப் பேரூராட்சியின் 10வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சை வேட்பாளரான பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.
இதனால், வெற்றியாளரை தீர்மானிக்க குலுக்கல் முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
தேர்தல் முடிவை வெளியிட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுயேட்சை வேட்பாளர் பழனிச்செல்வி வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் முடிவுகளின்படி, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வீடியோ பதிவுகளை ஆய்வு செய்த நீதிபதிகள், தேர்தல் முடிவை அறிவிப்பதில் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தனர். பின்னர், திமுக கவுன்சிலரின் வெற்றியை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் நடந்த போது, தேர்தல் அதிகாரி எப்படி அரசியல் கட்சி சார்பாக செயல்பட்டார் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதோடு, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில், இன்று டி.கல்லிபட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, மதுரை டி.கல்லுபட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேலும், அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்ததாக அதிகாரி விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, அழுத்தம் கொடுத்தது யார்..? உள்ளிட்ட விபரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் இந்த உத்தரவால் திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்கள் கிலியில் உள்ளனர்.