இந்தியை ஏற்க மாட்டோம்னு சொல்றாங்க.. ஆனா, இந்தி படங்களை இயக்கத் துடிக்கிறாங்க… இயக்குநர் பா.ரஞ்சித்தை மறைமுகமாக கலாய்த்த சக இயக்குநர்..!!
Author: Babu Lakshmanan30 April 2022, 5:20 pm
இந்தியை ஏற்க மாட்டோம் என்று சொல்பவர்கள்தான், இந்தி படங்களை இயக்கத் துடிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித்தை சக இயக்குநர் ஒருவர் மறைமுகமாக கலாய்த்து உள்ளார்.
ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மொழி முக்கியத்துவம் பற்றிய கருத்துக்கள் எழ ஆரம்பித்தன.
குறிப்பாக, திரைத்துறையிலும் மொழிப்போர் உருவாகி தேசிய அளவில் புயலை கிளப்பி வருகிறது. கேஜிஎஃப் 2 படம் வெளியான பிறகு, அந்தப் படத்தின் கதாநாயன் யாஷ், Proud kannadian என தனது டுவிட்டர் Profile-ல் பதிவிட்டது பெரும் பேசுபொருளாகியது.
அதேபோல, கன்னட நடிகர் கிச்சா சுதீப் – இந்தி நடிகர் அஜய் தேவ்கன் இடையே கருத்து மோதலும் வெடித்தது. மொழி விவகாரம் தொடர்பாக கிச்சா சுதீப் போட்ட பதிவிற்கு, “இந்தியாவின் தேசிய மொழி இந்திதான், பிறகு எதற்கு இந்தியில் நீங்கள் நடிக்கும் கன்னட படத்தை மொழி பெயர்க்கிறீர்கள்,” என அஜய் தேவ்கன் கருத்து கூறியது மேலும் மோதலை பெரிதாக்கியது. ஆனால், இதற்கு கிச்சா சுதீப்பும் தனது பாணியில் பதிலடி கொடுத்ததுடன், இருவரும் சமரசம் செய்து சண்டையை முடித்துக் கொண்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவாத்… இந்தியை விடுங்க சமஸ்கிருதம் தான் நாட்டிலேயே பழமையான மொழி, ஏன் சமஸ்கிருதத்தை இணைப்பு மொழியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என பேசியுள்ளார். இப்படி இந்தி சர்ச்சை நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதனிடையே, மதுரையில் நீலம் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ரஞ்சித், இந்தியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூறி அதிரடியாக பேசியுள்ளார். மேலும், திராவிடர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்பது அவசியம் என்றும் கூறினார்.
இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இந்த கருத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் திரவுபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன்ஜி டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் இந்தியை ஏற்கமாட்டோம், ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள் நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், இந்தி பேச பிடிக்காது, ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழிபெயர்த்து லாபமடைவார்கள், தமிழின் பெயரைச் சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள், என பதிவிட்டுள்ளார்.
இந்தி பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை, அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும் ஆதரவு தரலாம் என அவர் கூறியுள்ளார். அவரது இந்தப் பதிவு திரையுலகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.