தப்பியது தமிழகம்.. சிக்கியது தெலங்கானா : உயர்நீதிமன்றம் வைத்த டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2024, 6:14 pm
இந்திய துணை கண்டத்தையே பரபரப்பாகிய திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழகம் தப்பி உள்ளது. அதே நேரத்தில் தெலுங்கானா சிக்கி உள்ளது.
ஏழு கொண்டல வாலா கோவிந்தா என திருப்பதி ஏழுமலையானின் தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் பெறும் அருப்பிரசாதம் தான் லட்டு. முண்டியடித்து கூட்டத்தில் லட்டு வாங்கி வாங்கி வந்தால் தான் திருப்பதிக்கு சென்று வந்ததையே நண்பர்களும் உறவினர்களும் நம்புவார்கள்.
திருப்பதியில் வின்னுலக அதிபதியான தேவேந்திரனே பிரம்மோற்சவ விழாவை நடத்தி சீனிவாச பெருமாளுக்கு லட்டு நெய்வேத்தியம் செய்ததாக ஐதீகம் உண்டு. இப்படி சிறப்பு பெற்ற லட்டுக்கும் சோதனையை கொண்டு வந்தனர். லட்டில் மாட்டுக் கொழுப்பும், மீன் கொழுப்பும் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்தப் புகார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியில் பேசியது விஸ்வரூபம் எடுத்தது.
ஆந்திர அரசியல் இடிபாடுகளில் சிக்கியது. இந்திய அரசியலிலும் தீ பற்றி கொண்டது. திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிக்க இந்தியா முழுவதும் இருந்து 30 நிறுவனங்கள் நெய் வழங்கும் போது, தமிழகத்தைச் சேர்ந்த ஏ .ஆர். டெய்ரி புட் நிறுவனம் வழங்கிய நெய் தான் கலப்படம் ஓங்கி அடித்தனர். இந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இதனால் ஆந்திர அரசு திடீரென விசாரணை குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவும் விசாரணைக்கு துவக்கி வீறு நடை போட்டது. இந்நிலையில் தான் உச்ச நீதிமன்றம் அரசியலில் இருந்து கடவுளை தள்ளி வையுங்கள் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏன் பேட்டி கொடுத்தார் என்ற கேள்வியை கேட்டது. இதனால் விசாரணை நடத்த தடை விதித்தது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர். டெர்ரி புட் நிறுவனத்துக்கு மத்திய உணவு துறை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரம் மேலும் பிரச்சனை உருவாக்கியது.
இந்நிலையில் திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜூன் மாதம் முதல் எங்கள் நிறுவனம் நெய் விநியோகம் செய்து வந்தது. அந்த நெய்யில் (மாட்டுக் கொழுப்பு) கலப்படம் இருப்பதாக குஜராத்தை சேர்ந்த நிறுவனம் அறிக்கை அளித்தது. இதையடுத்து எங்கள் நிறுவனத்திடம் நெய் கொள்முதல் செய்ய தடை விதித்து, எங்கள் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் கருப்புப் பட்டியலில் சேர்த்தது.
இதையடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை எங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் முறையாக ஆய்வு நடத்தாமல் தனியார் ஆய்வகம் அளித்த அறிக்கை அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் தரப்பில், “மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை 2 நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ்களுக்கு விளக்கம் தர போதிய கால அவகாசம் வழங்கவில்லை. அந்த நோட்டீஸ்களில் என்ன விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது குறித்தும் குறிப்பிடப்படவில்லை. செப். 29-ல் நோட்டீஸ் அனுப்பி அக். 2-ல் நேரில் ஆஜராக கூறியுள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அனுப்பிய சோதனை அறிக்கையில் நெய்யில் (மாட்டுக் கொழுப்பு கலந்ததாக) கலப்படம் இருப்பதாக எங்கும் குறிப்பிடவில்லை. சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் சோதனை அறிக்கையில் லட்டில் எந்தவித கலப்படமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள நிறுவனம் அனுப்பிய அறிக்கையில் முரண்பாடு உள்ளது. எனவே, மத்திய உணவுப் பாதுகாப்பத்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் நெய் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்க போதுமான கால அவகாசம் வழங்க தயாராக உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்துக்கு எந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
எந்த வகையான விதிமுறை மீறல் காரணமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நோட்டீஸ்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாமல் தெளிவில்லாமல் உள்ளது.
செப்.29-ல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விடுமுறை நாளான அக்.2-ல் விளக்கம் அளிக்க கோரினால் எப்படி விளக்கம் அளிக்க முடியும்? சம்பந்தப்பட்ட நிறுவனம் செய்த விதிமீறல் குறித்து நோட்டீஸ்களில் எந்தவிதமான தகவல்களும், விவரங்களும் இல்லை.
ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அதற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். சென்னை ஆய்வக சோதனை அறிக்கையும், குஜராத் ஆய்வகம் அளித்த அறிக்கையிலும் முரண்பாடு உள்ளது. சென்னை கிங்ஸ் ஆய்வக அறிக்கையில் கலப்படம் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் நிறுவனம்.
இதையும் படியுங்க: கசந்து போன காதல்… தாலி கட்ட மறுத்ததால் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!
மத்திய உணவு பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிலையத்தில் சோதனை செய்துள்ளது. அந்த சோதனையின் முடிவுகள் எங்கே? இதுவரை ஏன் அதை வெளியிடவில்லை?. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. தற்போது இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் முக்கிய பொருளாக பேசப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் கூறியது போல் அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவது தான் சரியாக இருக்கும். எனவே, புதிதாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதற்குப் பதிலளிக்க 14 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும். மனுதாரர் நிறுவனம் உரிய கால அவகாசத்தில் பதிலளித்து நிவாரணம் பெறலாம்” என உத்தரவிட்டார்.
இதற்கிடையில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது. தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் இருந்து நெய்யை வாங்கியது அம்பலமாகியுள்ளது. தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது எனக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது கலப்பட நெய் என உறுதி செய்யப்பட்டுள்ளது. வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்திடம் 4 கன்டெய்னர் நெய்யை ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வாங்கியது தெரியவந்துள்ளது.
வைஷ்ணவி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் விவகாரத்தில் ஆந்திரா ,தமிழகம் ,தெலுங்கானா என மூன்று மாநிலங்கள் முக்கோண நிலையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தன.
இந்நிலையில் தமிழகம் தப்பியது. ஆந்திராவும் தெலுங்கானாவும் பிரச்சினையில் சிக்கி உள்ளன. தமிழக நெய் நிறுவனத்துக்கு பின்னப்பட்ட வலை உடைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தெலுங்கானாவும், ஆந்திராவும் யார் வலையை யார் உடைப்பார்கள் என்பது விசாரணை முடிவில் தான் தெரிய வரும்.