கருணாநிதி குடும்பம் என்பதே தமிழகம்தான் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2023, 11:22 am

அண்ணா அறிவாலயத்தில் கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது குடும்ப அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது, இப்போதெல்லாம் நல்லது செய்வதை கூட பயந்து செய்ய வேண்டி இருக்கிறது. நல்லதை கூட ஜாக்கிரதையாக, பொறுமையாக, பலமுறை யோசித்து செய்ய வேண்டியுள்ளது. வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை.

நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை. தி.மு.க. என்பது குடும்ப இயக்கம் தான், தொண்டர்களை தம்பி என அழைத்தவர் அண்ணா. தி.மு.க.விற்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் சொல்கிறார்.

பிரதமர் சொல்வது உண்மை தான், கருணாநிதி குடும்பம் என்பதே தமிழ்நாடு தான். திமுகவினர் அனைவரும் கருணாநிதியின் மகன் போன்றவர்கள் தான்; திமுக என்பது குடும்பம் தான்; கட்சியினரை தம்பி என அழைத்தவர் அண்ணா”

தி.மு.க. மாநாடு நடத்தும்போதெல்லாம் குடும்பம் குடும்பமாக மாநாட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி தான் அழைப்போம். மாநாட்டிற்கு மட்டுமல்ல, போராட்டத்திற்கும் கூட குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து கலந்து கொள்வது தான் தி.மு.க.

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பிரதமர் மோடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின் ஏற்பட்ட அச்சத்தால் தான் பிரதமர் மோடி இறங்கிவந்து பேசுகிறார்.

மணிப்பூர் வன்முறையால் பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடி அந்த பக்கமே செல்லவில்லை. மத்தியில் சிறப்பான மதச்சார்பற்ற ஆட்சி உருவாக தயாராக வேண்டும்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.

  • Arya and Santhanam reunion வைரலாகும் NEXT LEVEL போஸ்டர்:10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஆர்யா- சந்தானம்…எந்த படம்னு தெரியுமா..!