நீட் தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள் : அதிர்ச்சியில் திமுக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2022, 9:06 pm
Neet Dmk - Updatenews360
Quick Share

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பில்
சேர்வதற்காக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வை எதிர்கொள்வதில் தமிழக மாணவ, மாணவிகள் கடந்த 3 ஆண்டுகளாக அசத்தி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

நீட் : அதிகரிக்கும் மாணவர்கள்!!

ஆண்டுக்கு ஆண்டு தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருவது, கல்வியாளர்களை குஷிப்படுத்தியும் இருக்கிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நாடு முழுவதும் 497 நகரங்களில் 3500 மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் உள்ளிட்ட 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடந்தது.

வெளிநாடுகளில் நடைபெற்ற நீட் தேர்வு

தவிர முதல் முறையாக நாட்டுக்கு வெளியே அபுதாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர், துபாய் மற்றும் குவைத் சிட்டி ஆகிய நகரங்களிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸாமி, பெங்காலி, உருது உள்ளிட்ட மொழிகளில் தோ்வு நடைபெற்றது. நாடு முழுவதும்
18.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 17.78 லட்சம் மாணவா்கள் தோ்வை எழுதி 9 லட்சத்து 3 ஆயிரம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 56.28 ஆகும்.

அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா உட்பட 16 மாணவிகள் முதல் 50 இடங்களுக்குள் வந்தனர். தனிஷ்கா 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்த நீட் மாணவர்கள்

தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுத 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வை எழுதினர். இதில் 67 ஆயிரத்து 787 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இது 52 சதவீதமாகும்.

கடந்த ஆண்டில் 1,08318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி 58,922 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இது 54 சதவீதம். 2020ல் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பித்து 99,610 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 57,215 பேர் அதாவது 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

தமிழக மாணவர்கள் சாதனை

இந்த ஆண்டு தமிழகத்தில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.இவர் தேசிய அளவில் 30-வது இடத்தையும், தமிழக மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர் தேசிய அளவில் 43-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

தமிழகத்தில் 2020-ல் 57,000 பேர், 2021-ல் 59,000 பேர், இந்த ஆண்டு 67,000 பேர் என
நீட் தேர்ச்சியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி வருவதும், தேசிய அளவில் முதல் 50 இடங்களுக்குள், தமிழக மாணவர்கள் இடம் பிடிப்பதும் நீட் தேர்வை எழுதுவோர் அதன் மீது மிகுந்த நம்பிக்கையுடன் பங்கேற்பதை உறுதி செய்கிறது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. போட்டித்தேர்வு என்று வந்துவிட்டால் தமிழக மாணவ, மாணவிகள் காட்டும் ஆர்வம் அளப்பரியதாக உள்ளது என்று கல்வியாளர்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

இடஒதுக்கீட்டால் பயன்பெறும் மாணவர்கள்

“நாட்டிலேயே 35 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்ட பெருமைக்குரிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இவற்றில் 5,050 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதம் அதாவது 757 எம்பிபிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சென்றுவிடும். மீதமுள்ள 4,293 இடங்களும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கு 534 இடங்கள் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது. 436 எம்.பி.பி.எஸ். இடங்களும் 98 பி.டி.எஸ். இடங்களும் இதில் அடங்கும்.

கடந்த வருடத்தை போலவே இந்த ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை பொறுத்து போட்டி ஏற்படும்.

அதிர்ச்சியில் திமுக

அதேநேரம் தேசிய அளவில் மொத்த மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் அனைத்துப் பிரிவுகளிலும் 15 முதல் 20 மதிப்பெண்கள் வரை குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றுக்கு தமிழக மாணவர்கள் நீட் தேர்வு மீது காட்டிவரும் ஆர்வம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

ஏனென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் திமுக ஆட்சி அமைந்த பின்பு இரண்டாவது முறையாக நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியாகிவிட்டது.

பூச்சாண்டி காட்டும் திமுக

தமிழக மாணவர்களிடம் நீட் தேர்வு மீதான இதே ஆர்வம் நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தேர்ச்சி பெறுவதிலும் சரி, அதிக மதிப்பெண்கள் எடுப்பதிலும் சரி மற்ற மாநில மாணவர்களை மிஞ்சி விடுவார்கள் என்பது நிச்சயம். அதனால் நீட் தேர்வை பூச்சாண்டி போல காட்டுவதையும் ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை காரணம் காட்டி இத் தேர்வே கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது அல்ல.

அதேநேரம் நீட் தேர்வை அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்குரிய சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அதிக அளவில் நடத்த வேண்டும். இதுபோல பயிற்சிகளை அளிப்பதில் திமுக அரசு இந்த ஆண்டு அதிக ஆர்வம் காட்டாததால்தான், நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 17 ஆயிரம் பேரில் 3400 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. தமிழக மாணவர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு குறைந்ததற்கு இதுவும் கூட முக்கிய காரணமாக இருக்கலாம்.

இடஒதுக்கீடு : நடவடிக்கை எடுக்குமா திமுக?

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும்போது அவர்களை டாக்டர் கனவு மட்டுமே காணும் நிலைக்கு தள்ளி விடக்கூடாது. மருத்துவ படிப்பை விட்டால் வேறு பல துறைகளும் உள்ளன. அவற்றிலும் உங்களால் சாதிக்க முடியும், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களிடையே நீட் தேர்வு பற்றிய பயம் ஏற்படாது. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடமும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு.

அதேநேரம் அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் உண்மையிலேயே மருத்துவம் படிக்க வேண்டும் என்று திமுக அரசு கருதினால் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை10 சதவீதமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கலாம்.

தவிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

ஏனென்றால் தமிழகத்தில் உள்ள 32 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 5,375 எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் இருக்கின்றன. அதனால் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்தால், அதன் மூலம் முழுப் பயனையும் அடைவது தனியார் மருத்துவக் கல்லூரிகளாகத்தான் இருக்கும். அங்கு, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இடம் கிடைத்தால் கூட அவர்கள் மருத்துவ படிப்பை முடிக்க குறைந்த பட்சம் 55 லட்சம் ரூபாய் வரை கண்டிப்பாக தேவைப்படும்.

இதனால் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கோ, அரசு பள்ளி மாணவர்களுக்கோ ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. தவிர அவர்களால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.
மாறாக பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டுமே அங்கு சேர்ந்து படிக்க முடியும்” என்று அந்த கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 817

    0

    0