போக்குவரத்து துறையை தட்டி கேட்ட தமிழகத்தின் ஜான்சி ராணி : ரஞ்சனாவுக்கு ஆதரவு அளித்த எஸ்ஆர் சேகர்!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2023, 4:58 pm
போக்குவரத்து துறையை தட்டி கேட்ட தமிழகத்தின் ஜான்சி ராணி : ரஞ்சனாவுக்கு ஆதரவு அளித்த எஸ்ஆர் சேகர்!!
போக்குவரத்துத் துறையை தட்டிக் கேட்ட தமிழகத்தின் ஜான்சி ராணி ரஞ்சனா நாச்சியாருக்கு பாராட்டுகளை பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியிருப்பதாவது: தலைவிரித்தாடும் தரமற்ற ஒழுங்கற்ற பொறுப்பற்ற போக்குவரத்து துறையை தட்டி கேட்ட தமிழகத்தின் ஜான்சி ராணி @RanjanaNachiyar நாச்சியார் அவர்களுக்கு எம் பாராட்டுக்கள்,
வக்கற்ற வகையற்ற திக்கற்ற தெம்பற்ற திறனற்ற தைரியமற்ற #திமுக அரசு இந்த வீரப் பெண்மணியை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
அவர்களை உடனடியாக விடுதலை செய்க என முதல்வர் ஸ்டாலினை எஸ்.ஆர். சேகர் தனது எக்ஸ் பதிவு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகி நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் நேற்று குன்றத்தூர் வழியாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர்- போரூர் செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டை தாண்டியும் தொங்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பேருந்தை வழிமறித்த நடிகை ரஞ்சனா, டிரைவரிடம் சரிமாரி கேள்விகளை எழுப்பினார். பேருந்தில் இப்படி பயணிப்பவர்களை நீங்கள் செருப்பால் அடித்திருக்கலாமே! அங்க பாருங்க ஒருத்தன் மேல் ஏறுகிறான் என்றார்.
உடனே பேருந்தின் பின்வாசலுக்கு சென்ற ரஞ்சனா, அங்கு படியில் இருந்த மாணவர்களை இறங்குடா, இறங்குடா நாயே என அழைத்து வெளியே தள்ளினார். வர மறுத்த மாணவர்களை தலையிலும் கன்னத்திலும் ஓங்கி அடித்து கீழே இறக்கினார். பின்னர் நடத்துநரை பார்த்து ஒருமையில் உனக்கு அறிவு இல்லையா, இப்படி படியில் தொங்குவதை பார்த்துக்கிட்டு இருக்கே, அறிவு கெட்ட நாயே என திட்டினார்.
நடிகை ரஞ்சனாவின் நோக்கம் சரி என்றாலும் அதை அவர் கையாண்ட விதம் தவறு என்று கூறுகிறார்கள், மாணவர்களை கீழே இறக்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அவர்களை அடித்ததும், நாயே என பேசியதும் கன்டக்டரை ஒருமையில் பேசியது போன்ற செயல்கள்தான் அவரது நல்ல நோக்கத்திற்கு நெகட்டிவாக உள்ளன என்கிறார்கள்.
இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர் சரவணன் அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீஸார், கெரும்பாக்கத்தில் உள்ள நடிகை ரஞ்சனா வீட்டிற்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர். ரஞ்சனாவின் செயல்பாடு குறித்து இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது.
அதில் பெரும்பாலும் குழந்தைகளை அடிக்கும் உரிமையை இவருக்கு யார் கொடுத்தது என்றுதான் கேட்கிறார்கள். என்னதான் அந்த குழந்தைகள் செய்தது தவறு என்றாலும் கை நீட்டி அடிப்பதும் ஒருமையில் பேசுவதும் தவறுதானே என்கிறார்கள். அந்த சிறுவர்களை எச்சரித்து நல்ல படியாக சொல்லி கூட அனுப்பியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.