‘பிலவ’ ஆண்டுக்கு குட்- பை.. பிறந்தது ‘சுப கிருது’ புத்தாண்டு… ஆலயங்களில் சிறப்பு வழிபாடு..!!
Author: Babu Lakshmanan14 April 2022, 8:55 am
சித்திரை முதல் நாளான இன்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளதால், கோவில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஆண்டுதோறும் சித்திரை 1ம் தேதி தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை திருநாளாகவும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சித்திரை முதல் நாளான இன்று, ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி, அதிகாலை முதலே, கோவில்களில் பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
சித்திரை மாதத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் மையப்புள்ளியில் வருகிறது. இது இளவேனிற் காலத்தின் தொடக்கம். இரவு குறைந்து பகல் நேரம் அதிகமாகும். இந்த காலத்தில் கொன்றை உள்ளிட்ட மரங்கள் பூத்துக்குலுங்கும். மரங்கள் புதிய கிளைகள் விட்டு வளர்ச்சி அடையும். தேனடைகளில் தேன் அதிகமாகும். மா மரங்கள் அதிக காய்களைத் தரும், பலாப்பழங்கள் காய்த்து தொங்கும், வாழை அறுவடைக்காலம் என்று இயற்கையும் வரவேற்கும் விழாவாக சித்திரை விழா அமைகிறது.
பகல் நேரம் அதிகரித்து, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் அதிக வளர்ச்சி பெறுகிறது. அறிவியல் பூர்வமாகவும் சித்திரை மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாகவே உள்ளது.
சித்திரை தொடங்கி வைகாசி வரையான இளவேனிற் காலத்தின் தொடக்க நாளை (சித்திரை 1) பல்வேறு வகைகளில் நாம் வரவேற்கிறோம். அந்தவகையில் இளவேனிற்காலத்தின் தொடக்க நாளான இன்று ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்தது. தமிழ் புத்தாண்டையொட்டி மக்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.