ஸ்டாலினின் பெயரில் ‘ஸ’-வை நீக்க உடனே குழு போடுங்க.. அதுவரைக்கும் முதலமைச்சரை எப்படி அழைப்பீங்க… அண்ணாமலை கிண்டல்!!

Author: Babu Lakshmanan
16 May 2022, 6:04 pm

பாஜக வெளியிட்ட தமிழன்னையின் புகைப்படத்தை விமர்சித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு ரோம் நகரில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த வீடியோ அமைச்சர் மனோ தங்கராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். “இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை.. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைபடுத்தினர்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட தமிழணங்கு ஓவியத்துடன், எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்த தமிழன்னை புகைப்படத்திற்கு மாற்றாக புதிதாக தமிழ்த்தாயின் ஒரு ஓவியத்தை பதிவிட்டு, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என ட்வீட் செய்திருந்தார். மேலும், அந்த போட்டோவில் வடமொழி சொல்லான ‘ஸ’ எழுதப்பட்டிருப்பதும் சர்ச்சையை உருவாக்கியது.

இதனிடையே, ‘ஸ’ எழுத்து இடம்பெற்றிருப்பதை குறிப்பிட்டு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அவர் விடுத்த பதிவில், “தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றொரு டுவிட்டை போட்டுள்ளார். அதில், “தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள “ஸ” என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். “தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!

“ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!,” எனக் குறிப்பிட்டார்.

அவரது இந்தப் பதிவினால் டுவிட்டரில் பாஜக – திமுகவினரிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

  • வெட்கமே இல்ல? புது மருமகளை சக நடிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நாகார்ஜூனா!
  • Views: - 1142

    0

    0