தமிழகத்தில் அதானியின் தொழில் முதலீடா?…. அதானிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு… அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்!

Author: Babu Lakshmanan
9 January 2024, 9:09 pm

சென்னையில் திமுக அரசு நடத்திய இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 6 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை மூன்று முதல் 5 வருடங்களுக்குள் நிறுவி உற்பத்தியை தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றில் ஏதாவது பெரிய அளவில் சிக்கல் நேர்ந்தால் இந்த தொழிற்சாலைகள் அமைவதற்கு மேலும் சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், புரிந்துணர்வு செய்து கொள்ளப்பட்ட150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமமும் இடம் பெற்றிருந்ததுதான்.

தமிழகத்தில் அதானி குழுமம் பசுமை எரிசக்தித்துறையில் 24,500 கோடி, கனெக்ஸ் தொழிலில் 13,200 கோடி சிமெண்ட் உற்பத்திக்காக 3,500 கோடி சிஎன்ஜி எரிவாயு திட்டத்தில் 1568 கோடி என மொத்தம் சுமார் 42 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் யாருமே எதிர்பாராத ஒன்று. ஏனென்றால் கடந்த 7 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த மேடையில் பேசினாலும் சரி மோடியும், அதானியும் ஒன்று சேர்ந்து கொண்டு நாட்டை சூறையாடுகிறார்கள் என கடுமையாக தாக்கிப் பேசி வருவது போலவே திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி, கனிமொழி எம்பி மூவரும்
அதானியை குறி வைத்து தாக்கிப் பேசத் தவறியதே இல்லை. 2018-ம் ஆண்டு முதல் அதானிக்கு மத்திய பாஜக அரசு முன்னுரிமை அளிப்பதை திமுக கடுமையாக எதிர்க்க தொடங்கியது.

2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 தமிழக தேர்தல் ஆகியவற்றிலும் மோடி,அதானிக்கு எதிரான பிரச்சாரங்களை திமுக தலைவர்கள் முன் வைத்தனர்.

தமிழகத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அதானி மீது காட்டிய கோபத்தை விட இவர்களின் தாக்குதல் மிகத் தீவிரமாக இருந்தது. 2021ம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பும் கூட இதில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அதானிக்கு எதிரான யுத்தத்தை ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி மூவரும் ஒருபோதும் நிறுத்தவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ தொடரில் பேசும்போது “அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாஜக அரசின் மீதான நேரடியான குற்றச்சாட்டுகளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வே சீரியஸாக விசாரிக்கிறது. எனவே, இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதேபோல், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட வேண்டும். ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகள் ஆணித்தரமானவை. இதை பற்றி ஒரு வார்த்தை கூட பிரதமர் பதிலளிக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது”என்று கடுமையாக சாடியிருந்தார்.

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பல்வேறு திமுக பொதுக் கூட்டங்களில் பேசிய அமைச்சர் உதயநிதியும் தொழிலதிபர் அதானியை விட்டுவைக்கவில்லை.

“கடந்த 9 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தை மட்டும்தான் பிரதமர் மோடி வாழ வைத்துள்ளார். அதானி குடும்பம் தான் அது. இன்று உலகத்தின் 2வது பணக்காரர் என்ற இடத்திற்கு அதானி உயர்ந்திருக்கிறார். அனைத்து அரசுத் துறைகளும் அதானிக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. ஏர்போர்ட், ரயில்வே, துறைமுகம் என ஒரு கார்ப்பரேட் நிறுவனம், 9 ஆண்டுகளில் எப்படி வளர்ந்தது?… பாஜக ஆட்சியில் அதானி குடும்பம் மட்டும்தான் வாழ்ந்து வருகிறது, அவர் மோடியின் நெருங்கிய நண்பர். மோடி விமானி இல்லாமல் கூட வெளிநாடு போவார் ஆனால் அதானி இல்லாமல் போக மாட்டார்”
என்று உதயநிதி போட்டு தாக்கினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழியும் அதானி எதிர்ப்பு வாதத்தை தீவிரமாக முன்னெடுத்தார்.“ஒன்றிய அரசு அதானிக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதானி குறித்துப் பேசினால் தேசத்துக்கு எதிரானவர்களாகச் சித்திரிக்கப்படுகிறோம். அதானியை எதிர்த்து பேசுவது எப்படி இந்தியாவை எதிர்த்து பேசுவதாக ஆகும்?” என்று ஆவேசமாக கேள்வியும் எழுப்பினார்.

இப்படி தொழிலதிபர் அதானிக்கு எதிராக எந்த நேரமும் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருந்தவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் தமிழகத்தில்
42 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்திருப்பதை மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்ற கேள்விதான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

“அவர்கள் நாட்டை கொள்ளையடித்து சூறையாடுபவர்கள் அல்லவா? அவர்களை எப்படி இந்த மாநாட்டில் பங்கேற்க அனுமதித்தீர்கள்?… முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் கலந்து கொள்வதை உங்களுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவிக்காமல் மறைத்து விட்டாரா?….தமிழகம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்னும் இலக்கை அடைவதற்காக நீங்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டிய ஒரு தொழிலதிபரிடமே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வீர்களா?… அப்போ இதுவரைக்கும் அதானியை நீங்கள் வாரி தூற்றியதெல்லாம் வெறும் நாடகம் தானா?… இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?…” என்பன போன்ற கிடுக்குபிடி கேள்விகளும் பொதுவெளியில் நடுநிலை சிந்தனையாளர்களால் சரமாரியாக எழுப்பப்படுகின்றன.

இதற்கு திமுக தரப்பில் எந்த மாதிரியான பதில் அளிக்கப்படும் என்பது தெரியவில்லை என்றாலும் கூட “மாநில மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, மேம்பாட்டுக்காக, தமிழகத்தை முன்னோடி இந்திய மாநிலமாக உயர்த்துவதற்காக யாரெல்லாம் தொழில் முதலீடு செய்கிறார்களோ அவர்களையெல்லாம் நாங்கள் மனதார ஏற்றுக்கொள்வோம்” என்று கூறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

என்றபோதிலும் கூட தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய
கட்சி ஆகியவைதான் இந்த விவாகரத்தில் விழி பிதுங்கி போய் நிற்கின்றன. ஏனென்றால் இனி அதானியை தாக்கி பேசுவதா? வேண்டாமா?… என்ற குழப்பத்திற்கு அவை தள்ளப்பட்டு இருப்பதுதான் அதற்கு முக்கிய காரணம்.

வழக்கமாக தமிழகத்தில் நிகழும் அன்றாட மிக முக்கிய நிகழ்வுகள் குறித்து தங்களது X சமூக வலைத்தள பக்கத்தில் உடனுக்குடன் கருத்துக்களை பதிவிடும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என யாருமே திமுக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் பங்கேற்றது குறித்து மூச்சே விடவில்லை, அதைக் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை என்பது வியப்பளிக்கும் விஷயம்.

தற்போது தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பிடித்திருப்பதால் நாடாளுமன்றத் தேர்தல் வரை இனி அதானியை பற்றி பேசினால் அவ்வளவு நன்றாக இருக்காது, ஓட்டும் கிடைக்காது இதுவரை திமுகவை நம்பி நாம் கடுமையாக தாக்கிப் பேசி விட்டோம். இனி அந்தத் தவறை செய்யக்கூடாது என்ற முடிவுக்கு இந்தக் கட்சிகள் வந்தாலும் வரலாம்.

மேலும் மத்திய பாஜக அரசுடன், திமுக இணக்கமான போக்கை கையாளத் தொடங்கி விட்டதோ? என்ற சந்தேகமும் திமுக கூட்டணி கட்சிகளிடம் தற்போது எழுந்துள்ளது.
இதனால் தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு இருப்பதும் நிஜம்!

“அரசியல், தொழில்துறை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற எல்லாமே தனித்தனியாக பிரித்துப் பார்க்கப்பட வேண்டியவை. இதில் அரசியலை எதனுடன் தீவிரமாக தொடர்புபடுத்தி பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதையும் விமர்சித்தவர்களையே அது கடுமையாக திருப்பித் தாக்கும் என்பதையும் திமுக தலைமை இனியாவது உணர்ந்து கொள்ளவேண்டும்” என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதுவும் சரிதான்!

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 361

    0

    0