சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த இபிஎஸ்.. முந்திக் கொண்ட ஓபிஎஸ்.. சபாநாயகர் அப்பாவு கொடுத்த விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 11:53 am

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை எடப்பாடி பழனிசாமி தரப்பு புறக்கணித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பங்கேற்றனர்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரில், மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், முதல் நாள் சபை நிகழ்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இக்கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்து அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இது தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் மாறி மாறி சபாநாயகரிடம் கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த கடிதத்தின் மீது சபாநாயகர் அப்பாவு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எம்ஏ.,க்கள் இன்றைய கூட்டத் தொடரை புறக்கணித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இபிஎஸ் தரப்பினர் அதிமுக 50வது ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு எம்எல்ஏ.,க்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மட்டும் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். அதோடு, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக சார்பாக நாங்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றதாகவும், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் பற்றி அவர்களிடம் (இபிஎஸ் தரப்பிடம்) தான் கேட்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து, எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் கட்சியை கட்டி காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது :-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை நாளை பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை பேரவையில் நாளை முன்வைக்கப்படும். எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக 2 கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் பங்கேற்றார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 19ம் தேதி வரை நடைபெறும். நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் மட்டும் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுகுழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின வரவு செலவு அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார், எனக் கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!