திமுக ஆட்சியில் தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம்… இனியும் மெத்தனப் போக்கு வேணாம் ; எச்சரிக்கும் அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
6 July 2023, 5:31 pm

சென்னை ; திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வந்த தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவரை இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் லோகேஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி சென்று வெட்டிய மர்ம கும்ப கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- செங்கல்பட்டில், வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ஒருவரை, நீதிமன்றம் அருகில் வைத்து, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி வெட்டியிருக்கிறது அந்த கும்பல்.

திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருக்கிறது. நீதிமன்றங்கள் அருகிலும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடப்பது, இந்த ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் புலப்படுகிறது.

இது போன்ற தொடர் சம்பவங்களால், பொதுமக்களுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. திமுக அரசு தனது மெத்தனப் போக்கைத் தொடராமல், உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி