தமிழக அமைச்சரவையில் 5 மாற்றங்கள்… பிடிஆரின் இலாகா மாற்றம் ; புதிதாக அமைச்சரான டிஆர்பி ராஜாவுக்கு முக்கிய துறை ஒதுக்கீடு..!!

Author: Babu Lakshmanan
11 May 2023, 11:25 am

டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் 5 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டும், புதிதாக ஒரு அமைச்சருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது முதல் முறையாக அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சர் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியானது. அந்த வகையில் திருவள்ளூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாசருக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது நாசர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 3 முறை மன்னார்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் டிஆர்பி ராஜாவுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பை ஆளுநர் ஆர்என் ரவி செய்து வைத்தார். தொடர்ந்து, ஆளுநர் அவருக்கு வாழ்த்துக்களை கூறினார்.

தற்போது முதலமைச்சரோடு சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக உள்ள நிலையில், மூத்த அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் ஆடியோ சர்ச்சையில் சிக்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வேறு துறை மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் 5 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, புதிதாக அமைச்சரவையில் இணைந்துள்ள டிஆர்பி ராஜாவிற்கு தொழில் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழில்துறையில் இருந்த தங்கம் தென்னரசுவிற்கு நிதித்துறையும், நிதித்துறையை தன் வசம் வைத்திருந்த பிடிஆருக்கு தகவல் தொழில்நுட்ப துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாசர் நிர்வகித்து வந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சராக இருக்கும் சாமிநாதனுக்கு, தமிழ்வளர்ச்சி துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ