தமிழக காங்கிரஸ் 2 ஆக பிளவு படுகிறதா…? திடீரென வெடித்த கலகக் குரல்… தனி வழியில் செல்வப் பெருந்தகை…?
Author: Babu Lakshmanan12 November 2022, 5:58 pm
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
இதில் 3 நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், இரண்டு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு வழங்கியிருந்தனர். எனினும் பெரும்பான்மையான நீதிபதிகள் 10% இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தீர்ப்பளித்ததால் அதுவே இறுதியாகவும் அமைந்தது.
இந்த தீர்ப்பை மத்திய பாஜக அரசு உடனடியாக வரவேற்றது. அக் கட்சியின் தலைவர்கள் இது பிரதமர் மோடியின் வரலாற்றுச் சாதனை என்று புகழாரமும் சூட்டினர். இதே போல காங்கிரஸ் கட்சியும் இத் தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்தது.
அதன் தேசிய பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுபற்றி கூறும்போது, “பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட 103-வது திருத்தம், அரசியல் சாசனத்திற்கு விரோதமானது அல்ல என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது.
இந்த இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அடிப்படைப் பணிகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2005-06ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட சின்ஹோ ஆணையம் தனது பரிந்துரையை 2010-ல் வழங்கியது. அதன் பிறகு நாடு தழுவிய விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, 2014-க்குள் மசோதா தயாரிக்கப்பட்டது” என்று கூறி இருந்தார்.
ஆனாலும் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் இருவரும் “10% இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நூற்றாண்டு கால சமூக நீதி போராட்டத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. சமூக ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவது அரசியல்
சாசனத்திற்கு முரணானது. இந்தத் தீர்ப்பு உண்மையான பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு உதவாது” என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்தனர்.
இதை உடனடியாக மறுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, “டெல்லியில் கட்சித் தலைமை தெரிவிப்பதுதான் அதிகாரபூர்வமான நிலைப்பாடு” என்று ஜோதிமணிக்கும், கார்த்தி சிதம்பரத்திற்கும் தக்க பதிலடி கொடுத்தார். அதன் பிறகு அவர்கள் இருவரும் இதுபற்றி எதுவும் பேசவில்லை.
அதேநேரம் தமிழகத்தில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட்,விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை கடுமையாக எதிர்த்து வருகின்றன. டாக்டர் ராமதாஸின் பாமகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 10% இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அத்தனை கட்சிகளும் கலந்து கொள்ளும் விதமாக ஒரு சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
அந்த கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. இதில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்துக் கட்சிகள் சார்பாகவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, புதிய பாரதம் ஆகியவை புறக்கணித்து விட்டன. அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை 10% இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதால், அதன் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ஹசன் மௌலானா எம்எல்ஏ இருவரும் பங்கேற்று தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர்.
அதைவிட ஆச்சரியமான விஷயம், கூட்டம் முடிந்து வெளியே வந்த செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியபோது, “தேசிய கண்ணோட்டத்தில், காங்கிரஸ் பார்வை வேறு மாதிரியாக இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இடஒதுக்கீட்டை பொறுத்தவரை எங்கள் கட்சி நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டோம். ஆனால் சில செய்தி தொலைக்காட்சிகள் இதை வேறு விதமாக காட்சிப்படுத்துகின்றன” என்று
கூறி இருக்கிறார்.
“அவர் இப்படி தடாலடியாக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது, தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டுவிட்டதோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது” என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
“ஏனென்றால் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி இல்லாமல் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்ற மனநிலை அக்கட்சியின் பல தலைவர்களிடம் ஆழமாக பதிந்துவிட்டது. அதேநேரம் திமுகவுடன் கூட்டணி இருந்தாலும் கூட தங்களது தன்மானத்தை இழந்து விடக்கூடாது, திமுக இழுத்த இழுப்புக்கு எல்லாம் போகக்கூடாது என்ற எண்ணமும் சில தலைவர்களிடம் உள்ளது.
என்றபோதிலும் தேசிய அளவில் ஒரு பிரச்சனை என்று வரும்போது, கட்சியின் டெல்லி தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்பது காங்கிரஸில் உள்ள தலைவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இரு மாநிலப் பிரச்சனை என்றால் கூட நாங்கள் தமிழகம் சார்ந்து பேசினோம் என்று கூறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் 10% இட ஒதுக்கீடு என்பதோ நாடு முழுமைக்குமான ஒரு முக்கிய விஷயம்.
அதனால் இதை தேசிய பிரச்சனை, மாநில விவகாரம் என்று தனித்தனியாக பிரித்துப் பார்ப்பதும் கடினம். அதுவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி,
“பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சமூக நீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே 10% இடஒதுக்கீட்டை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது” என்று வரவேற்ற பின்பும் கூட அதை முற்றிலும் மறுத்து கருத்து கூறுவது செல்வப் பெருந்தகை தன்னிச்சையாக செயல்படுவது போலவே தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் திமுகவின் B டீம் போல மறைமுகமாக அவர் செயல்பட தொடங்கி விட்டாரோ என்ற சந்தேகத்தையும் எழுப்பி விட்டுள்ளது.
இத்தனைக்கும் கே எஸ் அழகிரிதான், தனக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்க காரணம் என்று வெளிப்படையாகவே கடந்த ஆண்டு கூறியிருந்தார். அப்படி இருந்தும் கூட தேசிய தலைமைக்கும், அழகிரிக்கும் எதிராக எப்படி செல்வப்பெருந்தகை கலக குரலை ஏன் எழுப்பி இருக்கிறார் என்பதுதான் புரியவில்லை?.. இதுபற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது வெளிப்படையாக தெரிந்துவிடும்.
இன்னொரு பக்கம் தேசிய அளவில்10% இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்கள் திமுக அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றதும், திமுக அரசின் தீர்மானத்தை ஆதரித்திருப்பதும் ஆச்சரியம் அளிக்கவில்லை.
ஏனென்றால் கேரளா, மேற்கு வங்கம் ஒரு போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. அதனால் அவர்கள் பிற மாநிலங்கள் பற்றி அதிகம் கவலைப்பட வாய்ப்பும் இல்லை. மேலும் தமிழக மார்க்சிஸ்ட் தலைவர்கள், திமுகவின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப அப்படியே, தங்களை மாற்றிக்கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.